பாகிஸ்தானில் பயங்கரம்- சிறை மீது தாக்குதல் நடத்தி 400 கைதிகளை விடுவித்த தலிபான்கள்!
பன்னு: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண நகரான பன்னுவில் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தலிபான்களின் செய்தித் தொடர்பாளர், சிறையில் இருந்த எமது பல நூறு தளபதிகளை நாங்கள் இன்றைய தாக்குதல் மூலம் விடுவித்துவிட்டோம். பலரும் எங்களது மறைவிடங்களுக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அல் குவைதா அமைப்புடன் தொடர்புடைய தலிபான்கள் இத்தகைய ஒரு தாக்குதலை நடத்தியிருப்பது பாகிஸ்தானின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இத்தகைய சிறைத் தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியிருந்தாலும் பாகிஸ்தானில் இப்படி நடப்பது அரிதான ஒன்று.
ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த காவல்துறை அதிகாரி மீர் சாகிப் ஜானும் இன்று அதிகாலை நடந்த இத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டதாக உறுதி செய்திருக்கிறார். மேலும் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்ததாகவும் கையெறிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சிறையில் மொத்தம் 944 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இதுவரை 384 பேர் தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications