கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க கட்சி தடை விதிக்கவில்லை-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்துககு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள கட்சி எனக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கடந்த 12ம் தேதி கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கலந்து கொள்வார் என போராட்ட குழுவினர் அறிவித்து இருந்தனர்.
போராட்டத்துக்கு ஒருநாள் முன்பு வரை அச்சுதானந்தன் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அச்சுதானந்தன் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ள கட்சி அவருக்கு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது.
அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் அச்சுதானந்தன் போராட்டத்தில் கலந்து கொண்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அவருக்கு கட்சி மேலிடம் தடை விதித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொளள எனக்கு கட்சி மேலிடம் தடை விதித்ததாக கூறுவது தவறு. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இதுவரை எனக்கு கட்சி மேலிடம் தடை விதிக்கவில்லை. ஆனாலும் போராட்டத்தில் கலந்து கொள்ள எப்போது கூடங்குளம் செல்வேன் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications