கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை
சென்னை: ஒரு மாதகாலம் கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் ஜூன் 1 ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 28-ந்தேதியுடன் முடிகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடந்து வருகிறது. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மாணவ- மாணவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதியுடன் இறுதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
இதைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு சில பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டாலும் 220 வேலை நாட்கள் நிறைவு பெறாத பள்ளிகள் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
கோடை விடுமுறை
மே 1-ந்தேதி முதல் அத்தகைய பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் மணி தெரிவித்தார். இதேபோல அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் எழுந்த பிரச்சினையை அடுத்து ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமையும் பள்ளிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு முன்னதாக அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூன் 1 ம் தேதியே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications