மேனன் உடல் நிலை மோசமானது; மருந்துகள் அனுப்பப்பட்டன!

இதையடுத்து மருந்துகளுடன் முன்னாள் எம்எல்ஏ மனிஷ் குஞ்சம் காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடத்தப்பட்ட கடந்த 4 நாட்களாக மருந்துகளை உட்கொள்ளவில்லை. இதனால், காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு நக்சல்கள் கோரியுள்ளனர்.
மருந்துகள் அனுப்புவதில் தாமதம் செய்து மேனன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நக்ஸல்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மனிஷ் குஞ்சம் மருந்துகளுடன் நக்ஸல்கள் சொன்ன காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, கலெக்டர் கடத்தப்பட்ட பகுதியை உள்ளடக்கிய பஸ்தார் பிராந்தியத்தில் நக்ஸல்கள் தேடுதல் வேட்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் மீட்கப்படும் வரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்பு படையினருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கலெக்டரை பத்திரமாக மீட்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆள் இல்லா விமானங்கள்:
இதற்கிடையே நக்ஸல்களின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பஸ்தார் மாவட்டத்தின் அடர்ந்து காட்டுப் பகுதியில் 40 முதல் 50 நக்ஸல்களின் நடமாட்டத்தை இந்த உளவு விமானங்கள் கண்டறிந்துள்ளன. இந்தப் பகுதியில் தான் மேனன் பணயக் கைதியாக வைத்திருக்கப்பட வேண்டும் என்று தெரிகிறது.
ஆனாலும், அங்கு தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் கலெக்டர் பால்மேனனின் மனைவி ஆஷாவை சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கேதார் காஷ்யப், உள்துறை முதன்மை செயலாளர் என்.கே.அஸ்வால், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பைஜேந்திர குமார் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பு குறித்து பைஜேந்திர குமார் நிருபர்களிடம் கூறுகையில், கலெக்டரை மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆஷாவிடம் எடுத்துக் கூறினோம். அவரது வீட்டுக்கு பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளோம். ஆஷா, தைரியமான பெண். அவருக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications