புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான்- மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதனை இன்று அறிவித்தார்.
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தொண்டைமான் இப்போது புதுக்கோட்டை நகராட்சித் தலைவராக உள்ளார். (ஏற்கனவே சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த முத்துச்செல்வியைத் தான் வேட்பாளராக நிறுத்தினார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து இங்கு நகராட்சித் தலைவருக்கு சான்ஸ் அடித்துள்ளது)
இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமானும் 3 முறை (1967, 1977, 1980 ஆண்டுகளில்) காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வயதான கார்த்திக் பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். 2005ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவராகவும் உள்ளார்.
இவருக்கு சுசீலா என்ற மனைவியும், சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் பலியானதையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே இந்திய கம்யூனிஸ்ட் இந்தத் தொகுதியில் வென்றது.
முத்துக்குமரன் மறைவையடுத்து இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் வகையில் அதிமுக ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சியௌ ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தேர்தல் வேலையை ஆரம்பித்த அதிமுக, இப்போது வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் இங்கு போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுக்குமாம். நல்ல வேளை தேர்தல் முடிந்த பின்னர் முடிவெடுப்பதாக தா.பாண்டியன் சொல்லவில்லை!.












Click it and Unblock the Notifications