'என்கவுண்டர்'களில் மகிழ்ச்சி அடைபவர்கள் அல்ல தமிழக போலீஸார்-ஜெ.

Subscribe to Oneindia Tamil
Jayalalitha

சென்னை: என்கவுண்டர்களை தங்களது சுய மகிழ்ச்சிக்காக நடத்துபவர்கள் இல்லை தமிழக போலீஸார். சென்னை வேளச்சேரி சம்பவத்திலும் கூட கொள்ளையர்கள் சுட்டதால்தான் போலீஸாரும் திருப்பிச் சுட்டனர் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேளச்சேரி என்கவுண்டர் குறித்து அவர் குறிப்பிடுகையில், காவல் துறையினர் சட்டப்படி எதையும் அணுகவேண்டும். குற்றவாளிகள் செயல்படுவது போல் போலீசாரும் செயல்படக் கூடாது. குற்றவாளிகள் எத்தகைய முறையையும் கையாளலாம். ஆனால் காவல் துறையினர் சட்ட முறையின்படிதான் செயல்பட வேண்டும். கண்டப்படி சுடக் கூடாது; தாக்கக் கூடாது என்றார்.

இதற்குப் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,

சென்னை, பெருங்குடியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில், 23.1.2012 அன்று மதியம் சுமார் 1.45 மணியளவில் ரூ.19 லட்சத்தையும், 20.2.2012 அன்று, 2 மணியளவில் கீழ்க் கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவ்விரு சம்பவங்களிலும் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது சம்பந்தமாக, துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி ஒருவனின் வீடியோ படத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்து, அந்நபர் குறித்து மேலும் விவரங்கள் அறிய அப்புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டனர். இதனையடுத்து வீடியோவில் பதிவான சந்தேகத்துக் குரிய நபர் மற்றும் நான்கு பேருடன் வேளச்சேரியிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், 22.02.2012 அன்று, அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையாளர் ஆர். சுதாகர் மற்றும் இரண்டு காவல் உதவி ஆணையர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு சிறப்பு உதவி ஆய் வாளர்கள் மற்றும் ஒரு காவலர் அடங்கிய காவல் குழுவினர், எதிரிகள் பதுங்கிய வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு, ஏ-பிளாக், பிளாட் எண்.335 என்ற முகவரிக்குச் சென்று அவ்வீட்டைக் கண்காணித்தனர்.

அவ்வீட்டில், சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருந்ததையடுத்து, காவல் துணை ஆணையாளர், அந்த வீட்டில் இருந்தவர்களிடம் தங்களை காவல் துறையினர் என்ற தமிழிலும் இந்தி மொழியிலும் அறிமுகம் செய்து, கதவைத் திறக்குமாறு கூறி கதவைத் திட்டினார். ஆனால், உள்ளிருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதிலாக, உரத்த குரலில் இந்தி மொழியில், காவல் குழுவினர் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர்.

அதே நேரத்தில், அந்த வீட்டினுள் இருந்தவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவல் துணை ஆணையாளர், துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தி, சரண் அடைய வேண்டுமென தமிழ், இந்தி மொழிகளில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் எச்சரிக்கைக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டன. மக்கள் நெருக்கம் மிகுந்த அப்பகுதியில் மேற்படி வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டது, பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருந்ததால், எதிரிகள் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தாததால், காவல்துறையினர் வேறு வழியின்றி எதிரிகளை நோக்கி திருப்பிச் சுட்டனர்.

இத்தாக்குதலில் வீட்டினுள் இருந்த 5 நபர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. காயமுற்ற காவல் ஆய்வாளர்கள் மற்றும் 5 நபர்களும் உடனடியாக சென்னை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் காயமுற்ற ஐந்து எதிரிகளையும் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

எதிரிகள் மறைந்திருந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவ் வீட்டிலிருந்து ஐந்து கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், ஒரு ஷாட்கன், வெடிமருந்து, ஒரு பையிலிருந்து ரொக்கம் ரூ.14,01,020. வாக்காளர் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது சம்பந்தமாக, வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்காக தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு அனுப்பபப்பட்டு, அவரது அறிவுரையின்படி சென்னை 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு, இறந்து போனவர்களின் உடல் மீதான பிரேத விசாரணையையும் நடத்தினார்.

பின்னர் 27.02.2012 அன்று, இவ்வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறைக்கு மேல் விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது. இப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு இறந்துபோன ஐந்து எதிரிகளின் அடையாளங்களை சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களின் உதவியுடன் கண்டறிந்து அவர்கள், சுஜய்குமார் ராய், ஹரிஷ் குமார், வினோத் பிரசாத், ஜே.பி. யாதவ் மற்றும் நவ்னீத்குமார் என உறுதி செய்தனர்.

பின்னர், எதிரிகளின் உடல்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், இறந்து போன எதிரிகள் அனைவரும் பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெடி பொருட்களை பயன்படுத்தி பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி, காவல் அலுவலர்களுக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணையை மத்திய குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த ரிட் மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இம்மனுவின் விசாரணை 05.06.2012 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே வழக்கு நிலுவையில் உள்ளதால், இதற்கு மேல் இதுபற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+