புதுக்கோட்டை இடைத் தேர்தலை விஜய்காந்தும் புறக்கணிக்கிறார்?
திருச்சி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி வெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் நோக்கம். அவர்களுக்கு வயிற்று வலி, அதனால் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்துவிட்டார்கள். எனக்கு வயிற்று வலி இல்லை. அதனால் சரியான நேரத்தில் எனது முடிவை அறிவிப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகிறார். திருச்சி, திருவெறும்பூர் தொகுதிகளில் நேற்று பொது மக்களிடம் விஜயகாந்த் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார்.
அப்போது திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் அளித்த பேட்டி:
கேள்வி: சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாமல், தினமும் தேமுக வெளிநடப்பு செய்கிறதே?
பதில்: ஆளுங்கட்சியினர் தானே எங்களை வெளிநடப்பு செய்ய வைக்கிறார்கள். அ.தி.மு.கவினர் இதுவரை என்ன மக்கள் பிரச்சனையை சட்டசபையில் பேசி இருக்கிறார்கள். திருச்செங்கோட்டில் ரேசன் கடையில் நடந்த ஊழலை கண்டுபிடித்தேன். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள். எங்கள் கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல் இருப்பதால்தான் வெளி நடப்பு செய்கிறோம்.
கேள்வி: ஆரம்பத்தில் தேர்தலில் நிற்கும்போது தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி என்றீர்கள். அதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டீர்களே?
பதில்: சட்டசபை தேர்தலில் மக்களுக்காகத்தான் கூட்டணி வைத்தேன். மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று நான் எப்பொதுமே சொல்லி வருகிறேன். இப்போதும் அதைத் தான் சொல்கின்றேன். மக்கள் ரூபத்தில் தான் தெய்வம் உள்ளது.
கேள்வி: கருணாநிதி ஆரம்பித்துள்ள டெசோ அமைப்பு பற்றிய உங்கள் கருத்து?
பதில்: இதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட டெசோ ஏன் கலைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?. பொறுத்து இருந்து பாருங்கள். உங்களுக்கே தெரியும்.
கேள்வி: இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழு குறித்து..?
பதில்: இலங்கைக்கு எம்.பிக்கள் குழு சென்றது வெறும் கண் துடைப்பு. இலங்கையில் இன்னும் கண்ணிவெடிகள் எடுக்கவில்லை. அதனை எடுத்த பிறகு தான் தமிழர்களை அங்கு குடியமர்த்த முடியும் என்று இலங்கை அரசு சொல்கிறது. அது பொய். தமிழர்களை கொன்று உடல்களை புதைத்த இடத்தில் தோண்டினால், கொத்து குண்டு வீசியது தெரிந்துவிடும் என்பதற்காக தான் கண்ணிவெடி இருப்பதாக கதை கட்டுகிறார்கள்.
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா?.
பதில்: ஏன் அவசரப்படுகிறீர்கள். இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம். பொறுத்து இருந்து பாருங்கள்.
பஸ் கட்டணம், பால் விலை, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் கவலை எல்லாம் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி வெற வேண்டும் என்பது தான். அவர்களுக்கு வயிற்று வலி, அதனால் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்துவிட்டார்கள். எனக்கு வயிற்று வலி இல்லை. அதனால் சரியான நேரத்தில் இந்தத் தேர்தல் குறித்து எனது முடிவை அறிவிப்பேன்.
கடந்த ஆட்சியில் 11 இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 5 இடைத்தேர்தல்களில் அதிமுக போட்டியிடவில்லையே ஏன்? என்றார் விஜய்காந்த்.
இவர் சொல்வதைப் பார்த்தால் திமுகவைப் போல தேமுதிகவும் இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications