காவிரி டெல்டா பகுதியில் வெள்ள நீரை சேமிக்க ரூ.1,560 கோடியில் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: காவிரி டெல்டா பகுதியில் வெள்ள நீரை சேமிக்க ஆசிய வளர்ச்சி வங்கியின் 1,092 கோடி நிதியுதவியுடன் ரூ.1,560 கோடியில் புதிய திட்டம் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில்,

உலகம் இனிதே இயங்க மழை நீர் இன்றியமையாதது. எனவேதான் 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். நீரின் அவசியத்தை கருதி எனது தலைமையிலான அரசு மழை நீர் சேகரிப்பு திட்டத்தினை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

தற்போது, பருவ நிலை மாறுதல்களினால் கடல் நீர் மட்டம் உயரும் எனவும், அதன் விளைவாக பாதிப்புகள் ஏற்படும் என உலகளவில் பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பருவ நிலை மாறுதல்களின் விளைவாக இன்னும் 40 ஆண்டுகளில் காவிரி டெல்டா கடலோர மாவட்டங்களில் கடல் நீர் மட்டம் உயரும்போது, அப்பகுதிகளில் உப்பு நீர் உட்புகுந்து செழிப்பான விளைநிலங்கள் பாதிப்படையும் அல்லது ஒரு சில பகுதிகளில் பாசனம் அறவே பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் என்றும், நிலத்தடி நீரின் தன்மையும் மாறுபட்டு நீரின் உவர்ப்புத் தன்மை அதிகரித்து எதற்கும் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றும்,

மேலும் கடை மடைப்பகுதிகளில் உள்ள வடிகால்களின் வழியாகவும் கடல் நீர் உட்புகுந்து பருவமழைக் காலங்களில் வெள்ள நீர் வடிவதை தடுப்பதோடு மட்டுமின்றி விளை நிலங்களில் தேங்கி விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகளின் பொருளாதார நிலை பெருமளவில் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் கடலில் இருந்து உட்பகுதியில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலை தூரம் வரையிலுள்ள பகுதிகள் ஏறக்குறைய சம மட்டப்பகுதிகளாக அமைந்துள்ளதால், வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் சில நாட்களில் பெய்யும் அதிகப்படியான மழை நீரால் வடிகால்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மழைக்கால நீரை தேக்கி வைப்பதற்கான போதிய வசதியின்மை காரணமாக, வெள்ள நீர் கடலுக்குள் வீணாகச் சென்று கலக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் அதிகப்படியாக கிடைக்கும் வெள்ள நீரை, மழை இல்லாத காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் பெருமளவில் பயன்படுத்த இயலாத நிலையும் உள்ளது. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கிடைக்கக் கூடிய வெள்ள நீரை தேக்கி வைத்து தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்காக பயன்படுத்துவதும், உப்பு நீர் உட்புகுதலை தடுப்பதும் மிகவும் அத்தியாவசியமாகிறது.

இந்தச் சூழ்நிலையில், மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விடுபட வழிவகை செய்யும் பொருட்டும், பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை பெருமளவு எதிர் கொள்ளும் வகையிலும்,

- காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பழமையான கடை மடை மதகுகள் மற்றும் அதன் தொடர்புடைய கட்டமைப்புகளை மறுகட்டுமானம் செய்தல்

- காவிரி கடை மடை பகுதிகளில் மேலும் மதகுகள் அமைத்து வெள்ள நீரை தேக்கி வைத்து பாசனத்திற்காக பயன்படுத்துதல்

- இதன் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த வழிவகை செய்தல்

- கடல் நீர் உட்புகுதலை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டம் 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி 1,092 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. திட்ட மதிப்பீட்டில் மீதமுள்ள தொகையான 468 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கும்.

இத்திட்டத்தின் மூலம் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பாசன அமைப்புகளில் ஒரு பகுதியை சார்ந்த சுமார் 4.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

மேற்கண்ட பணிகளால் மாநிலத்தின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டா பகுதியின் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படும். இத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+