ஜெ. வந்த நாளிலிருந்து விபத்துகள்- மரணங்கள்.. என்ன சாபக்கேடோ?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: மம்தா பானர்ஜி போல மத்திய அரசிடம் சலுகை கேட்காமல் வரிக்கு மேல் வரி போட்டு மக்களை ஜெயலலிதா கசக்கி பிழிந்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளதா?

பதில்: ஓ, நன்றாக சீரடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் வெளிவந்த ஏடுகளைப் பார்த்தாலே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த அளவிற்கு சீராக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

—திருச்சி உடையான்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பழனிசாமி என்பவரை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் கண் எதிரிலேயே ஓட ஓட வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். செங்குன்றத்தில் பட்டப் பகலில் உருட்டுக்கட்டையால் அடித்து லாரி டிரைவர் சேகர் கொலை. பொன்னேரி, நாலூர் ஏரிக்கரையில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் எரித்துக் கொலை.— விழுப்புரம் வழுதரெட்டி ஏரியில் பெண்ணைக் கொன்று ஏரியில் உடல் வீச்சு. தஞ்சை அருகே லாரி உரிமையாளர் பழனி அடித்துக் கொலை. மயிலாடுதுறையில் 3 ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை. வேப்பேரியில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் 5 லட்சம் நகைகள் கொள்ளை.

கேள்வி: புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: ஏடுகளில் வந்த அந்தச் செய்தியை நானும் பார்த்தேன். வழக்கமாக இடைத் தேர்தலின் போது சம்பந்தப்பட்ட தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருக்கும். தற்போது தொகுதியில் மட்டும் நன்னடத்தை விதிகளை கடைப்பிடித்தால் போதும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விதிகளைக் கடைப்பிடிக்காமல் அரசின் நலத்திட்ட உதவிகளையெல்லாம் சர்வ சாதாரணமாக வழங்கி வந்தார்கள். இனி கேட்கவா வேண்டும்?

கேள்வி: ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லையே? அது என்ன சாபக்கேடு?

பதில்: சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அதிமுக ஆட்சியில் அத்தகைய மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களைப் பார்த்தாலே, 1,5,2012ல் ஆரணியில் கோயில் தேரோட்டத்தின் போது, தேர் அச்சு முறிந்து 5 பக்தர்கள் பலியாயினர். இதே போல் குடியாத்தத்தில் தேர் திருவிழாவில் 5 பக்தர்கள் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்கள். ஆண்டிப்பட்டி அருகே நரசிங்கப் பெருமாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் அச்சு முறிந்தது. ஒவ்வொரு நாளும் இது போன்ற அசாதாரண மரணங்கள், மாணவர்கள் தற்கொலைகள், விபத்துக்களில் சாவு என்று சோகமயமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கேள்வி: டாஸ்மாக் மூலமாக அரசுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 கோடி வருவாய் கிடைக்கவுள்ள நிலையில், பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவையெல்லாம் தேவைதானா?

பதில்: இதை விடக் குறைவாக அரசுக்கு வருவாய் வந்த நிலையிலே கூட திமுக அரசு மக்களுக்கு சிரமத்தை உண்டாக்கக்கூடிய இந்தக் கட்டண உயர்வுகளையெல்லாம் செய்யவில்லையே? மின்வாரியத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன், தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் என்றெல்லாம் திமுக அரசு ஏதோ சொந்தக் காரணங்களுக்காக கடன் வாங்கியதைப்போல பழி சுமத்திக் கொண்டிருக்கவும் இல்லை.

மேற்குவங்க அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் மத்திய கடன் மட்டும் உள்ளதாம். வட்டியாக மட்டுமே ரூ. 22 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருக்கிறதாம். அதற்காக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதற்கு முந்தைய ஆட்சியைக் குறை சொல்லவில்லை. மாறாக பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மத்திய கடனைத் திருப்பிச் செலுத்த மேற்குவங்க அரசுக்கு மூன்றாண்டு அவகாசம் அளிக்கும்படி கோரியிருக்கிறார். 2000 முதல் 2006ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்துக்கு கடனைத் திருப்பி செலுத்த அவகாசம் வழங்கியதைப் போல மேற்கு வங்கத்துக்கும் அவகாசம் தரும்படியும் கேட்டிருக்கிறார். ஆனால் நமது தமிழக அரசு வரிக்கு மேல் வரியை உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

கூடுதல் வக்கீல்கள் நியமனம்

கேள்வி: அரசு வக்கீல்கள் நியமனத்தில் அரசின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டும்கூட, வக்கீல்களை நியமனம் செய்வதில் காலதாமதம் செய்யப்பட்டதாகவும், அதைப்பற்றி நாளேடு ஒன்றில் செய்தி வந்ததும், அடுத்த நாளே அவசர அவசரமாக அந்த இடங்களை நிரப்பி விட்டதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: உண்மைதான். பணிச் சுமைகளை சமாளிக்க கூடுதல் பணி இடங்களை உருவாக்கக்கோரி அட்வகேட் ஜெனரல் 2011ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அரசுக்கு கடிதம் அனுப்பி, அதை அதிமுக அரசு பரிசீலித்து 28 கூடுதல் பணி இடங்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது. அரசு ஆணை பிறப்பித்த தேதி 16-2-2012. மூன்று மாதங்கள் ஆகிறது. புதிதாக 28 இடங்கள் உருவாக்கப்பட்டதில் இதுவரை 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த செய்தியை தமிழ் நாளேடு ஒன்று விரிவாக வெளியிட்ட பிறகு, அவசர அவசரமாக 4-5-2012 அன்று தமிழக அரசு இந்த வக்கீல்களை நியமனம் செய்துள்ளது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+