குழாய் மூலம் எரிவாயு விநியோகத்துக்காக கெயில் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம், மின் உற்பத்தி போன்றவற்றுக்காக கெயில் நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எரிசக்தி தேவை

தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவின் பங்களிப்பு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில், எனது அரசால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் திரவ நிலை எரிவாயு முனையங்கள் அமைப்பது மற்றும் எரிவாயு விநியோக குழாய் இணைத் தொகுதிகள் அமைப்பது ஆகியவை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய வருடத்திற்கு 5 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்ட இரண்டு திரவ நிலை எரிவாயு இறக்குமதி முணையங்கள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுப்பள்ளி ஒப்பந்தம்

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் எண்ணூர் துறைமுகத்தின் அருகில், திரவநிலை எரிவாயு இறக்குமதி முனையம் ஒன்றினை அமைக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், அதாவது டிட்கோ நிறுவனமும், மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத் தினை 22.3.2012 அன்று எனது முன்னிலையில் செய்து கொண்டன.

2016-ஆம் ஆண்டில் இம் முனையம் செயல்படும்போது ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் டன் திரவநிலை எரிவாயுவை இறக்குமதி செய்து அதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 18 மில்லியன் கனமீட்டர் எரிவாயுவை தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கும், தொழிற்சாலைகளுக்கும், வாகனங்களுக்கும், வீட்டு உபயோகத்திற்கும் விநியோகம் செய்ய இயலும்.

கெயில் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்

இதனை விநியோகிக்க தேவையான குழாய் தொடரமைப்பு திட்டங்கள் அவசியம் என்பதன் அடிப்படையில், கெயில் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், அதாவது டிட்கோ நிறுவனமும் எரிவாயு ஒத்துழைப்பு செயல் திட்ட ஒப்பந்தம் ஒன்றில் 10.5.2012 அன்று எனது முன்னிலையில் கையெழுத்திட்டன.

7 மாவட்டங்கள் பயன்

கெயில் நிறுவனம் கொச்சியில் நிறுவப்பட்டு வரும் திரவ எரிவாயு முனையத்திலிருந்து எரிவாயுவை கொண்டு செல்லும் கொச்சி-பெங்களூரு குழாய் தொடரமைப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. இக்குழாய் தொடரமைப்பில், 310 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதி தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக செல்லும்.

கெயில் நிறுவனம் தமிழ்நாடு வழியே செல்லும் இக்குழாய் தொடரமைப்பின் பாதையில் உள்ள தொழில் மையங்கள், போக்குவரத்து வாகனங்கள், நகர்ப்புறத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றிற்கு தேவையான எரிவாயுவை விநியோகம் செய்வதற்கான இணை குழாய் தொடரமைப்பு திட்டத்தினை மேற்கொள்ளும். இத்திட்டம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும். இந்த குழாய் தொடரமைப்பின் சேலம் முனையத்திலிருந்து கடலூர் பகுதி வரையில் நாளொன்றுக்கு 6 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும்.

திரவ எரிவாயு முனையம்

தென் மாவட்ட கடலோர பகுதியில் மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனையம், ஒன்றினை உருவாக்கும் திட்டம் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் கெயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். டிட்கோ நிறுவனம் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்கும்.

எரிவாயு மூலம் மின் உற்பத்தி

மேலும் கொச்சி-பெங்களூரு எரிவாயு குழாய் தொடரமைப்பில் கிடைக்கும் எரிவாயு மூலம் முதற் கட்டமாக 500 மெகா வாட் திறனுள்ள மின் உற்பத்தி திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தயாரிப்பு மண்டலங்கள்

மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், உயர்தர உட்கட்டமைப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போட்டியிட்டு வணிகம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்ட புதிய தயாரிப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதற்கட்டமாக, தூத்துக்குடி மாவட்டம்-ஒட்டப்பிடாரத்தில் 1500 ஏக்கர்; வேலூர் மாவட்டம்-காட்ராம்பாக்கத்தில் 2000 ஏக்கர்; கிருஷ்ணகிரி மாவட்டம்-ஓசூரில் 4000 ஏக்கர் பரப்பளவில் புதிய தயாரிப்பு மண்டலங்கள் நிறுவப்படும். இந்த புதிய மண்டலங்களை நிறுவி மேலாண்மை செய்வதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் அமைக்கப்படும்.எண்ணூர் துறைமுகம் பகுதியின் முக்கியத்துவத்தை கருதி அங்குள்ள சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும் என்றும், ஒரகடம் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி பொருட்களை எளிதில் அனுப்ப வசதியாக வடக்கு துறைமுக இணைப்புச் சாலை அமைக்கப்படும் என்றும் நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

கனரக பொறியியல் தொழிற்சாலை மையம்

புதிதாக உருவாகும் இந்த சாலைகளுக்கு அருகில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் கனரக பொறியியல் தொழிற்சாலைகளுக்கான ஒரு பெரு மையம் ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

20 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகம்

சிப்காட் நிறுவனமானது தற்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிலங்களை விரைந்து அளிக்க வசதியாக சுமார் 20,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் தொழிற் பூங்காக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 100 கோடி ரூபாய் நிதியுடன் தொழில் கட்டமைப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+