தாய், மகளைக் குத்திவிட்டு கொள்ளையடிக்க முயன்றபோது மதுரவாயல் நகைக்கடை அதிபரைக் கொன்றவன் சிக்கினான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரவாயல் நகைக்கடை அதிபர் கணேஷ்ராமைக் கொன்ற கொலையாளி ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது போலீசில் சிக்கினான்.

மதுரவாயல் நெற்குன்றம் பட்டேல் சாலையில் நகைக் கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்த கணேஷ்ராம்(29) என்பவரை கடந்த மாதம் 14ம் தேதி கடைக்கு நகை வாங்குவது போல் வந்த ஆசாமி ஒருவன் கத்தியால் குத்திக் கொன்றிவிட்டு கடையில் இருந்த 100 பவுன் நகையுடன் தப்பியோடினான். கடையில் இருந்த கேமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து போலீசார் அவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை பள்ளிக்கரணை மீனாட்சிபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி அனு தேவநாராயணனின் வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க ஒரு ஆள் வந்துள்ளான். அப்போது தேவநாராயணன் வீட்டில் இல்லை. கணக்கெடுக்க வந்தவன் வீட்டில் தனியாக இருந்த தேவநாராயணின் மனைவி சந்திர பிரபா மற்றும் அவரது மகள் ராக்கியை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையடிக்க முயன்றான.

ஆனால் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கணக்கெடுக்க வந்த ராமஜெயம் என்ற அபு(27) தான் கணேஷ்ராமைக் கொன்றவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொலையாளி அளித்த வாக்குமூலம் வருமாறு,

எனது தந்தை ஆறுமுகம் விவசாயம் செய்கிறார். நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. என்னை செல்லமாக வளர்த்தனர். நான் கேட்டதை எல்லாம் எனது தந்தை வாங்கி கொடுத்தார். கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். விவசாய நிலத்தை விற்று என்னை என்ஜினீயரிங் படிக்க வைத்தார்.

நான் அரியர்ஸ்' வைத்துதான் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். ஆனால் உடனே வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்து இருந்தால் எனது வாழ்க்கை இந்த அளவுக்கு தடம் புரண்டு இருக்காது.

வேலை கிடைக்காததால் நான் இலங்கை சென்று கொழும்புவில் விமானம் ஓட்டும் பைலட்' பயிற்சியில் சேர்ந்தேன். 10 மாதம் அந்த பயிற்சி பெற்றேன். ஆனால் அந்த பயிற்சியை கூட முழுவதும் முடிக்க முடியாமல் விதி என் வாழ்க்கையில் மீண்டும் விளையாடியது. கொழும்புவில் நான் பைலட்' பயிற்சி பெற்ற போது சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெய் என்ற டாக்டரின் நட்பு கிடைத்தது. ஜெய் என்னை கோடீஸ்வரனாக்குவதாக சொன்னார். போதை மாத்திரை, மருந்து விற்பனை செய்யலாம் என்றும், அதற்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்றும் சொன்னார்.

நானும் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் ரூ.10 லட்சத்தை வட்டிக்கு வாங்கி கொடுத்தேன். ஆனால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு டாக்டர் ஜெய் என்னை ஏமாற்றி விட்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டார். இதனால் பெருத்த ஏமாற்றத்தோடும், ரூ.10 லட்சம் கடனாளியாகவும் சென்னை வந்தேன்.

ரூ.10 லட்சம் கடனை எப்படி? அடைப்பது என்று யோசித்தேன். மதுரவாயல் நெற்குன்றத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது கணேஷ்ராம் நகை கடையையும், அவர் தனியாக இருந்து தொழில் செய்வதையும் கவனித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் நான் காதலிலும் விழுந்தேன். ஜெய்சங்கர் என்ற போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவியின் தங்கையை நான் காதலித்தேன். அந்த பெண்ணும் என்ஜினீயரிங் படித்தவர். அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்தேன்.

திருமணத்துக்கு முன்பு ரூ.10 லட்சம் கடனையும் அடைக்க வேண்டி இருந்தது. கணேஷ்ராம் பார்ப்பதற்கு வலுவான ஆளாக இல்லை. இதனால் அவரை எளிதில் மிரட்டி, அவரது கடையில் உள்ள நகைகளை கொள்ளை அடிக்க திட்டம்போட்டேன். அதற்கு முன்னோட்டமாக ஏப்ரல் 13ம் தேதி நான் அவரது கடையை நோட்டமிட்டேன். 14ம் தேதி அன்றும் கடைக்கு போனேன். அப்போதும் அவர் தனியாக இருந்தார்.

இதனால் கடைக்குள் நுழைந்து நகைகள் வாங்குவது போல நடித்தேன். பின்னர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டினேன். ஆனால் கணேஷ்ராம் கூச்சலிட்டார். இதனால் அவரை கொலை செய்ய வேண்டியதாகிவிட்டது. நகைகளை அள்ளிக்கொண்டு தப்பி ஓடினேன். ஆனால் எனது துரதிருஷ்டம் கொள்ளை அடித்த நகைகள் கூட ஒரிஜினல் நகை இல்லை. இதனால் மீண்டும் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இதற்கிடையில் எனது புகைப்படம் தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதனால் போலீஸ்காரர் ஜெய்சங்கர் வீடுதான் எனக்கு பாதுகாப்பானது என்று கருதி அவரது ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் தங்கினேன். எனது காதலி எனக்கு அடைக்கலம் கொடுத்தாள். கொள்ளை அடித்த கவரிங் நகைகளை உண்மையான நகைகள் என்றும், இலங்கையில் இருந்து வாங்கி வந்தது என்றும் சொல்லி, அதையும் போலீஸ்காரர் வீட்டில் கொடுத்து வைத்தேன்.

எனது துரதிருஷ்டம் என்னை விரட்டி, விரட்டி கெடுதல் செய்தது. பள்ளிக்கரணையில் கொள்ளை அடிக்க முயற்சித்த போது போலீசில் மாட்டி விட்டு, விட்டது. நான் கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடையவன் என்பது போலீஸ்காரர் ஜெய்சங்கருக்கும், அவரது உறவு பெண்ணான எனது காதலிக்கும் தெரியாது. எனது இந்த கேவலமான நடவடிக்கையால் எனது பெற்றோர், எனது காதலி ஆகியோருக்கு பெருத்த துரோகம் செய்து விட்டேன் என்று கூறியுள்ளான்.

கணேஷ்ராம் கடையில் கொள்ளையடித்த 100 பவுன் நகையில் வெறும் 6 பவுன் மட்டுமே தங்கம் மற்றவை கவரிங். ஆனால் ராமஜெயம் அந்த 6 பவுனையும் விற்று பணமாக்கியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமஜெயத்திற்கு அடைக்களம் கொடுத்த போலீஸ்காரர் ஜெய்சங்கர் அவன் ஒரு கொலையாளி என்பதே தனக்கு தெரியாது, டிவி, பத்திரிக்கையில் வந்த அவனது புகைப்படத்தைப் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் என்பதால் தான் தனது வீட்டில் தங்க வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து விசாரித்து ஜெய்சங்கர் மீது குற்றம் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+