Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தம் செய்யாதீர்கள்.. அது 'வேஸ்ட்'!: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலத்தில் அரசே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13,000 பேர், பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை குறித்து 8-5-2012 தேதி வெளியிட்ட அறிக்கையில் "மத்திய அரசும், இந்தத்துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை; அழைத்துப் பேசி சுமூக முடிவு காண முன்வர வேண்டுமென்றும், அதற்கு பிரதமர் ஆவன செய்திட வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், "என்.எல்.சி. தொழிலாளர் போராட்டப் பிரச்சனை தமிழக அரசின் வரம்புக்கு உள்பட்டது இல்லை' என்று கூறியுள்ளார்.

2008ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது போராட்டம் நடைபெற்றது. அப்போதும் 13,000 தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஆட்சியிலே இருந்த தி.மு. கழகம் மாநில அரசுக்கு இதிலே அக்கறை இல்லை என்று சொல்லாமல், முதல்வராக இருந்த நானே இந்தப் பிரச்சனையிலே தலையிட்டு 16-6-2008 அன்று தொழிற்சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5,000 பேர்களை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வது; ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தைவிட, மாதம் ரூ.750 உயர்வு தரவும் இசைவு தந்து ஒப்பந்தம் ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

அதன்பின்னர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் நிர்வாகம் கால தாமதம் செய்ததால், 2010ம் ஆண்டு மீண்டும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்பொழுதும் தமிழக முதல்வராக இருந்த நான் 15-10-2010 அன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினேன். அதன் பின்னர் நிர்வாகத்தை அழைத்துப்பேசி, மாதம் 1,040 ரூபாய் உயர்வாக ஏற்றுக் கொள்ளச் செய்தேன். இதனை தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டார்கள்.

தற்போது நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை கூட்டுறவு சேவை சங்கத்தில் பதிவு செய்வதை நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி காலதாமதம் செய்து வருகிறது. அதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியிருக்கிறார். திருச்சி சிவா மாநிலங்களவையிலும் பேசியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியபோது எத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் இப்போது என்ன நிலைமை? அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ பேச்சுவார்த்தை நாள் கணக்கில் நடக்கிறதே தவிர, முதல்வரோ, அமைச்சரோ இதிலே ஏன் தலையிடவில்லை? தொழிற்சங்கத் தலைவர்களை முதல்வரோ, அமைச்சரோ அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? ஏன் பேசவில்லை?.

மத்தியில் ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை என்று குறை கூறும் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையில் ஏன் தலையிடவில்லை?.

நான் தொழிலாளர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வேலை நிறுத்தம் செய்வதையெண்ணி கவலைப்பட்டு துடிதுடித்துப் போகின்ற அரசு அல்ல தற்போது நடப்பது!. உங்கள் வேலை நிறுத்தம் தொடருமேயானால், உங்கள் குடும்பத்தினர்தான் பாதிக்கப்படுவார்கள். வேலை நிறுத்தம் தொடருமேயானால் மின் உற்பத்தியும் மேலும் பாதிக்கப்படக்கூடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, விரைவில் உங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பணியிலே தொடருவதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்தில் அரசே இல்லாத நிலையில், மத்தியிலே ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாவது; இந்தப் பிரச்சனையிலே மேலும் காலதாமதம் செய்யாமல், அலட்சியம் இல்லாமல், உடனடியாக நிர்வாகத்தினரை அழைத்துப் பேசி தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் சுமூக முடிவு காண முன்வர வேண்டுமென்று அந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒரு கட்சியின் தலைவன் என்ற முறையிலே மீண்டும் ஒருமுறை வற்புறுத்தி வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+