ஹெல்மட் அபராதம்: திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் எதிரே பேராசிரியர்- போலீஸ்காரர் அடிதடி!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் எதிரே போலீஸ்காரரும், கல்லூரிப் பேராசிரியரும் கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா சாலையில் நேற்று காலையில் பா.ஜ.கவினர் பெட்ரோல் உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். அந்த செய்தியை சேகரிக்கவும், படம் பிடிக்கவும் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
அப்போது அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், போலீஸ்காரர் ராஜேந்திரன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளை மடக்கி ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அங்கு ஹெல்மட் அணியாமல் பைக்கில் வந்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மகேஸ்வரனை போலீசார் மடக்கினர். ஆனால் அவர் அபராதம் கட்ட மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே பாஜக மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நான் வேலைக்கு தாமதமாக செல்கிறேன். நீங்களும் மடக்கி மேலும் காலதாமதம் செய்கிறீர்களே, எத்தனையோ பேர் ஹெல்மட் அணியாமல் செல்கிறார்கள், ஏன் என்னை மட்டும் பிடிக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார்.
அப்போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மகேஸ்வரனுக்கும் போலீஸ்காரர் ராஜேந்திரனும் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் தரையில் உருண்டனர். பின்னர் பேராசிரியரை போலீஸ்காரர் போலீஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்.
நடந்தது அனைத்தையும் பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்துவிட்டதால்,
இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், இருவரையும் சமாதானம் செய்து வழக்கு எதுவும் போடாமலும், அபராத தொகை வாங்காமலும், பேராசிரியரை அனுப்பி வைத்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications