கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம்மில் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி
கரூர்: கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம்.-ல் பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேனை கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சுங்ககேட் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். உள்ளது. இங்கு வெள்ளியணை கத்தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (55) வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் வழக்கம் போல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கச் சென்ற போது அங்கு சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுப்ரமணியத்தின் வாயை துணியால் கட்டி, பின் தலையில் கூர்மையான ஆயுதம் மூலம் தாக்கி அவரை கொலை செய்துவிட்டு ஏ.டி.எம். மிஷினை கடப்பாறையால் குத்தி, பணத்தை திருட கொலையாளிகள் முயன்றுள்ளனர். ஆனால் மிஷினை உடைக்க முடியாததால் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து லில்லி என்ற மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தப்பட்டபோது கொலை நடந்த ஏ.டி.எம்.-ல் இருந்து புலியூர் ரோட்டில் சிறிது தூரம் ஓடி நாய் நின்றது.
கொலை செய்யப்பட்ட சுப்ரமணியத்துக்கு ராஜாமணி, சாந்தி ஆகிய இரண்டு மனைவிகள், நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி ராஜாமணி சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். போக்குவரத்து மிகுந்த பகுதியில் ஏ.டி.எம். வாட்ச்மேன் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications