'மம்தா மூலம் மன்மோகன் பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ்!': இந்திய கம்யூ கூறுகிறது!
டெல்லி: மன்மோகன் சிங்கின் பெயரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மமதா பானர்ஜி அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியின் குள்ளநரித்தனமாகும். இது காங்கிரஸ் அரங்கேற்றியுள்ள நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
நேற்று திடீர் திருப்பமாக மமதா பானர்ஜியும், முலாயம் சிங் யாதவும் சந்தித்துப் பேசிக் கொண்ட பின்னர், காங்கிரஸ் தெரிவித்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர்களை இருவரும் கூட்டாக நிராகரித்தனர். மேலும், மன்மோகன் சிங் அல்லது அப்துல் கலாம் அல்லது சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரையே வேட்பாளராக்க வேண்டும் என்று அறிவித்தனர்.
இதனால் இந்த விவகாரத்தில் மேலும் குழப்பம் கூடியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். குறிப்பாக மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜிக்கு நாங்கள் தர தெரிவிக்க மாட்டோம்.
அதிலும் சோம்நாத் சாட்டர்ஜிக்கு ஆதரவு தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்டிப்பாக அவரை ஆதரிக்க மாட்டோம்.
மமதா பானர்ஜியும், முலாயம் சிங்கும் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரைச் சொல்லியிருப்பது அப்பட்டமான கேலிக்கூத்தாகும், இது காங்கிரஸ் போட்ட நாடகமாகும் என்றார்.
இருப்பினும் அப்துல் கலாம் பெயருக்கு இடதுசாரித் தலைவர்கள் இதுவரை பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications