பிரணாப் முகர்ஜி... ராஷ்டிரபதி பவனுக்கு ஏற்ற சரியான வாத்தியார்!

சாதாரண ஆசிரியராக இருந்த பிரணாப் முகர்ஜி அரசியலில் புகுந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளைக் கடந்து விட்டார். இப்போது நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கல்லூரி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பிரணாப் முகர்ஜி. இதனால் எப்போதுமே அவரிடம் கண்டிப்பும், கறாரும் தாண்டவமாடும். தப்பு செய்தாலோ அல்லது தவறாக பேசினாலோ யாராக இருந்தாலும் கண்டிக்கத் தவற மாட்டார் பிரணாப். அது கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி. பட்டென்று பேசி விடுவார் பிரணாப் - நாடாளுமன்றக் கூட்டங்களின்போது இதை மக்களும் பார்த்துள்ளனர்.
செல்போனில் வரும் நாங்க பிப்பிபிப்பி பேங்கிலிருந்து பேசுறோம்... மாதிரியான கால்களால் படு கடுப்பான இந்தியர்களில் பிரணாபும் ஒருவர். இதை அவரே பகிரங்கமாக கூறி ஒருமுறை கோபப்பட்டதால் நாடே பரபரப்பானது. அதன் பிறகுதான் அதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் இன்று அடியோடு குறைந்து போயுள்ளன. மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசி விடுவது பிரணாபின் பலம்.
60களில்தான் பிரணாபின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. பங்களா காங்கிரஸில் ஈடுபட்டு செயல்பட்டார் பிரணாப். அப்போது மேற்கு வங்க முதல்வராக அஜோய் முகர்ஜியும், துணை முதல்வராக ஜோதிபாசுவும் இருந்தனர். பங்களா காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார் பிரணாப் முகர்ஜி.
அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற பிரணாப் ஞாபக சக்தியில் புலி. அரசியல் வரலாறு தொடர்பான எந்த நிகழ்வு பற்றிக் கேட்டாலும் படாரென்று பதிலளித்து கலகலக்க வைப்பார். இவரை நடமாடும் என்சைக்ளோபீடியா என்றுதான் பலரும் செல்லமாக அழைக்கின்றனர். இவரது சகாக்கள் பலரும் உங்களைப் போல உண்டா என்று நேரடியாகவே புகழ்ந்து பேசியுள்ளனர் - சற்றே பொறாமையுடன்.
பிரணாபின் தந்தை கிங்கர் முகர்ஜி. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இடையில் சில காலம் வக்கீலாகவும் இருந்துள்ளார் பிரணாப். பத்திரிக்கையாளராகவும் பேனாவுடன் திரிந்துள்ளார். 1969ம் ஆண்டு விதி இவரை ராஜ்யசபாவுக்கு இழுத்து வந்து நிறுத்தியது. அன்று முதல் இன்று வரை பிரணாபின் அரசியல் வாழ்க்கையில் உச்சம், உச்சம், உச்சம்தான் - இடையில் சில பல குழப்பங்களைத் தவிர்த்து.
1973ம் ஆண்டு மத்திய தொழில் வளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் 1982 முதல் 1984 வரை இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். இந்தப் பதவியை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் மன்மோகன் சிங்கின் 2வது ஆட்சியின்போது மறுபடியும் பிரணாப் வகித்தார் என்பது சுவாரஸ்யமான ஒரு ஆச்சரியம்.
மிகுந்த நினைவாற்றலும், புத்திசாலித்தனமும், சாதுரியமும், திறமையும் மிகுந்தவர் பிரணாப். தீவிர காங்கிரஸ்காரராக இருந்தாலும் கூட பிராக்டிகலாக பேசக் கூடியவர். எதையும் பிராக்டிகலாக அணுகக் கூடியவர்.
பிரணாப் முகர்ஜி இத்தனை திறமைகளும் நிரம்பியவராக இருந்தபோதிலும் அவர் கடைசி வரை காங்கிரஸில் நம்பர் 2 தலைவராகவே இருந்து விட்டார் என்பது மட்டுமே அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தமான ஒன்று. இந்திரா காந்தி மறைந்தபோது அவர் பிரதமர் பதவியை அடைய விரும்பினார். ஆனால் அது ராஜீவ் காந்திக்குப் போனதால் அப்செட்டான பிரணாப் முகர்ஜி சில காலம் காங்கிரஸை விட்டு விலகியிருந்தார். பின்னர் மீண்டும் கட்சிக்குள் வந்தார், அமைச்சர் பொறுப்பிலும் அமர்ந்தார்.
இவரைத் தேடி பிரதமர் பதவி வராவிட்டாலும் கூட பிரதமர் பதவியில் அமர்ந்தவர்கள் இவரிடம்தான் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யமான ஆச்சரியம்.
மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் சரி, இப்போதைய 2வது ஆட்சியிலும் சரி பிரணாபைத் தவிர்த்து ஒரு நாள் கூட ஆட்சி நடந்ததில்லை, கட்சி நடந்ததில்லை. அப்படி ஒரு முக்கியத்துவத்துடன் வலம் வந்தவர் பிரணாப்.
நீண்ட காலமாக ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அதாவது 1969 முதல் 2004 வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர். 2004ம் ஆண்டுதான் முதல் முறையாக நேரடி தேர்தலில் போட்டியிட்டார். மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2009 தேர்தலில் மீண்டும் வென்றார். ஆனால் இனிமேல் போட்டியிட மாட்டேன், வயதாகி விட்டது என்று கறாராக கூறி விட்டார்.
நரசிம்ம ராவ் காலத்தில் இவரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இவரது நிதியாற்றல் காரணமாக திட்டக் கமிஷன் துணைத் தலைவராகவும் இரட்டைப் பதவி கொடுத்து வைத்திருந்தார். அதையும் அழகாக சமாளித்தார் பிரணாப்.
மன்மோகன் சிங்குக்கும், பிரணாபுக்கும் இடையிலான தொடர்புகளும் நீண்ட காலமானவை. அதாவது ஒருவர் நிழலை மற்றவர் துரத்திக் கொண்டு ஓடுவதைப் போல இருவருமே மாறி மாறி பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
1982ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் மன்மோகன் சிங். அதேபோல 1985 முதல் 87 வரை மன்மோகன் சிங் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். இப்பதவியை 1991 முதல் 96 வரை பிரணாப் வகித்தார். அப்போது மன்மோகன் சிங், நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார்.
அதேபோல பிரணாப் முகர்ஜி 1987 முதல் 89 வரை காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசனைப் பிரிவின் தலைவராக இருந்தார். இதே பொறுப்பை 1999 முதல் 2004 வரை மன்மோகன் சிங் வகித்தார். இப்படி இருவருக்குமான தொடர்பு ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு போல தொடர்ந்து வந்தது.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல பிரணாப் முகர்ஜியின் திறமையைக் குறித்துச் சொல்ல வேண்டுமானால் இதைச் சொல்லலாம் - இத்தனை ஆண்டு கால அமைச்சர் பதவி அனுபவத்தில் மொத்தம் 33 பல்வேறு துறைகளின் அமைச்சர் குழுக்களுக்குத் தலைவரா இருந்துள்ளார் பிரணாப்.
இதை விட வேறு என்ன வேண்டும், பிரணாப்பைப் பற்றிச் சொல்ல... வாழ்த்துவோம்.












Click it and Unblock the Notifications