மப்பில் ஜீப் ஓட்டிய உக்கடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் விஸ்வநாதன்
கோவை: கோவையில் குடிபோதையில் ஜீப் ஓட்டிய உக்கடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை கமிஷனர் விஸ்வநாதன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோவையில் போலீஸ் கமிஷனராக ஏ.கே. விஸ்வநாதன் பதவி ஏற்றது முதல் சாலை விதிகளை மீறுவோர் மீதும், மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலத்தில் போலீஸ் ஜீப் ஒன்று இரவில் தாறுமாறாகச் சென்று எதிரே வந்த இரண்டு வாகனங்களின் மீது மோதி நின்றது.
இதனால் அந்த பாலம் வழியாக வந்தவர்கள் அலறி அடித்து தங்களது வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஜீப் ஓட்டி வந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஜீப் ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
விசாரணையில் கோவை உக்கடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தான் மது அருந்திவிட்டு அந்த ஜீப்பை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என தெரிய வந்தது. இது குறித்து விளக்கம் கேட்க கமிஷனர் சுந்தரேசனின் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கோவை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் செயல்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications