அடேங்கப்பா... தாஜ்மஹால் ஹோட்டலைப் பார்த்து வாய் பிளந்த தீவிரவாதிகள்!

இந்தியாவிடம் சிக்கியுள்ள அபு ஜிண்டால் எனப்படும் ஜபியுதீன் அன்சாரி இந்தத் தகவல்களை டெல்லி போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.
அபு ஹம்சா, அபு ஜிண்டால் என்று பல்வேறு புனை பெயர்களில் சுற்றி வந்தவன் இந்த அன்சாரி. இவனது பூர்வீகம் மகாராஷ்டிரா மாநிலம். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலை கராச்சியிலிருந்து கட்டுப்படுத்திய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அறையில் சம்பவத்தன்று இருந்தவன். மிக மிக முக்கிய தலையான இவன் சிக்கியிருப்பது பாகிஸ்தான பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. கிட்டத்தட்ட கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் இருக்கிறது பாகிஸ்தான்.
இந்த நிலையில் சவூதி அரேபியாவிடமிருந்து பெறப்பட்டுள்ள ஜிண்டாலை, டெல்லி போலீஸார், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு தஙகளது பொறுப்பில் வைத்து விசாரித்தபோது இதுவரை வெளிவராத பல தகவல்களை ஜிண்டால் கக்கியுள்ளான்.
10 பேர் கொண்ட தீவிரவாதக் கும்பலை பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக மும்பைக்கு அனுப்பி 3 நாட்கள் கொலைவெறியாட்டத்தை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் முழு செயல்பாடுகளையும் தற்போது ஜிண்டால் புட்டுப் புட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் திட்டம், அதை திட்டமிட்டவர்கள், நடத்தியவர்கள், கராச்சியில் இருந்தபடி செயல்பட்ட கட்டுப்பாட்டு அறை குறித்த முழுமையான விவரங்களையும் ஜிண்டால் மூலம் அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிகிறது.
அபு ஜிண்டால் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கிடைத்துள்ள தகவல்கள் குறித்த ஒரு பார்வை...
முக்கியப் புள்ளி சாஜித் மிர்
பாகிஸ்தானில் இருந்தபடி தீவிரவாத தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்திய கும்பலில் முக்கிய நபராக லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய கமாண்டர்களில் ஒருவனான சாஜித் மிர் இருந்துள்ளான். இவன்தான் ஒட்டுமொத்த தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டவனாம். இந்த மிர் குறித்து அமெரிக்காவில் சிக்கிய டேவிட் ஹெட்லியும் கூட எப்பிஐ அதிகாரிகளிடம் நிறைய தெரிவித்துள்ளான். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் இணைந்து மிர் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக ஹெட்லி கூறியுள்ளான்.
முஸாமில் பட்
அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில தீவிரவாத பொறுப்புக் குழுத் தலைவனாக கூறப்படும் முஸாமில் பட்டும், முக்கியப் பங்காற்றியுள்ளான். இவன்தான் தாக்குதல் நடத்திய 10 பேர் கொண்ட கும்பலுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தவன்.
கராச்சியில் இருந்தபடி தாக்குதலை நேரடியாக கண்காணித்து வந்த கட்டுப்பாட்டு அறையில் இவனும் இருந்துள்ளான். இரண்டு தீவிரவாதிகள் ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்தபோது, அதைச் சுற்றி இந்திய ராணுவ கமாண்டோக்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் வெடிகுண்டுகளை வைத்து கட்டடத்தை தரைமட்டமாக்கக் கூடும் என்று இரண்டு தீவிரவாதிகளையும் எச்சரித்துள்ளான் பட்.
ஜகியூர் ரஹ்மான்
கட்டுப்பாட்டு அறையில் இருந்த இன்னொரு முக்கியப் புள்ளி லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தலைவரான ஜகியூர் ரஹ்மான். அவனது தளபதியான மஸார் இக்பால் என்பவனும் கூடவே இருந்துள்ளான். இவனுக்கு அபு அல் காமா என்ற இன்னொரு பெயரும் உண்டு.
சூப்பர்வைஸ் செய்த அப்துல் வாஜித்
அதேபோல ஜரார் ஷா என்ற புனை பெயர் கொண்ட அப்துல் வாஜித் என்பவன்தான் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டை மேற்பார்வையிட்டுள்ளான். இவன் ஒரு கம்ப்யூட்டர் நிபுணர். கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி அதைக் கட்டுப்படுத்தியவன் இவன்தான்.
இந்திப் பாடம் எடுத்த ஜிண்டால்
ஜிண்டால் இந்த சதித் திட்டத்தில் இணைந்தபோது அவனிடம் மும்பை தாக்குதல் திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது. அதன் பின்னர் தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்ட 10 தீவிரவாதிகளுக்கும் இந்தி கற்றுக் கொடுக்கும் பணி ஜிண்டாலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று திசை திருப்ப லஷ்கர் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். தங்களுக்கு அபு ஜிண்டால் என்பவர் இந்தி கற்றுக் கொடுத்ததாக தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியான முகம்மது அஜ்மல் கசாப் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளான் என்பது நினைவிருக்கலாம்.
தாஜ்மஹாலைப் பார்த்து வியந்த தீவிரவாதிகள்
பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குப் படையெடுத்த தீவிரவாதிகள் தாஜ்மஹால் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது எடுத்த எடுப்பிலேயே தாக்குதலை நடத்தவில்லையாம். மாறாக ஹோட்டலைப் பார்த்து வியந்து நின்றுள்ளனர்.
ஒரு தீவிரவாதி, இங்கு நிறைய கம்ப்யூட்டர்கள் உள்ளன. 30 இன்ச் சைஸுக்கு ஸ்கிரீன் உள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களிடம் ஆச்சரியத்துடன் கூறியுள்ளான். இன்னொருவன், பிரமிப்பாக இருக்கிறது, இங்கு ஜன்னல்கள் எல்லாம் பெரிது பெரிதாக உள்ளது என்று வியப்புடன் கூறியுள்ளான். இன்னொருவன், இங்கு இரண்டு சமையலறைகள், ஒரு குளியலறை, சின்ன ஷாப் ஆகியவை உள்ளன என்று கூறியுள்ளான்.
இதைக்கேட்ட முஸாமில் பட், அப்படியே நின்று கொண்டிருக்காதீர்கள். கையெறி குண்டை வீசுவதற்கான தூரத்தில்தான் உள்ளீர்களா, முதலில் அதைச் செய்யுங்கள் என்று அவர்களை விரைவுபடுத்தியுள்ளான் என்று கூறியுள்ளான் அபு ஜிண்டால்.
ஏற்கனவே டேவிட் ஹெட்லி எப்.பி.ஐயிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தை அப்படியே பிரதிபலிப்பது போல உள்ளதாம் அபு ஜிண்டால் கொடுத்துள்ள வாக்குமூலம்.
ஜிண்டாலை ஜூன் 21ம் தேதி மாலையில் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் வினோத் யாதவ் முன் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் அப்போது ஜிண்டாலுக்கு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகள் குறித்த விவரங்களை மாஜிஸ்திரேட்டிடம் போலீஸார் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு ஜிண்டாலிடம் பெறப்பட்ட தகவல்களை ஒரு சாட்சியமாக முன்வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது தனது தாடியையும், தலைமுடியையும் வெகுவாக குறைத்து விட்டான் அபு ஜிண்டால். அவனைப் பார்த்தால், ஒரு தீவிரவாதி போலவே தெரியவில்லை, போதைப் பொருளுக்கு அடிமையானவன் போல காணப்பட்டான் என்று ஜிண்டால் நீதிபதியிடம் கொண்டு வரப்பட்டபோது நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ஜிண்டாலை போலீஸ் காவலில் எடுக்க மும்பை போலீஸார் விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுவும் மாஜிஸ்திரேட் வினோத் யாதவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ இப்போதைக்கு ஜிண்டாலை காவலில் எடுக்கும் திட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications