திருமணத்திற்கு சென்ற கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு திருமணத்திற்கு சென்ற கார், விபத்தில் சிக்கியதில் நெல்லையை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம், எம்.ஜி.பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜகோபால்(61). இவரது மகன் ரஜினிகாந்த்(34). இவர் ஒரு கார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி வினிதா(30) ஈரோடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள தூக்குக்குடி வந்தார். முதலில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நெல்லை சென்றனர். காரை ரஜினிகாந்த் ஓட்ட, அவரது மனைவி, பிள்ளைகள், தந்தை ராஜகோபால்(65), உறவினர் சரோஜா(65) உட்பட 6 பேர் காரில் பயணித்தனர்.
ரஜினிகாந்த்தின் கார் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளத்திற்கும் தெய்வச் செயல்புரத்திற்கும் இடையே உள்ள பகுதியில் சென்ற போது ரோட்டின் குறுக்கே திடீரென்று மாடு ஒன்று புகுந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் காரை திருப்ப முயன்றார். ஆனால் மாட்டின் மீது கார் மோதி, கட்டுப்பாட்டை இழந்தது. அதன்பிறகு எதிரே வந்த டிப்பர் லாரி, கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி அப்பளம் போல் நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார், பொதுமக்களின் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரை ஓட்டிய ரஜினிகாந்த், அவரது தந்தை ராஜகோபால், ரஜினிகாந்தின் அத்தை சரோஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரஜினிகாந்தின் மனைவி டாக்டர் வினிதா, மகன் வினய்ரிஷி, மகள் ரிசன்யா ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் ரிஷன்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications