சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து வசதி பெற்ற கிராமம்
நெல்லை: இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் பேருந்து வசதி இல்லாமல் இருந்த கிராமத்திற்கு முதன்முதலாக அரசு பேருந்து இயக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வன்னிகோனேந்தல் பஞ்சாயத்தைச் சேர்ந்தது அடைக்கலாபுரம் கிராமம். சங்கரன்கோவில்-நெல்லை பிரதான சாலையில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கை வைத்தும் யாரும் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் இப்பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் இப்பகுதி மக்கள் சார்பில் யூனியன் சேர்மன் முருகையா பாண்டியன் பேருந்து வசதி கேட்டு மனு கொடுத்தார். அந்த மனுவை பரீசிலித்த அமைச்சர் உடனடியாக சங்கரன்கோவிலில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தேவர்குளம் செல்லும் அரசு டவுன் பேருந்தை அடைக்கலாபுரம் வழியாக இயக்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கான விழாவுக்கு தலைமை வகித்த யூனியன் சேர்மன் முருகையா பாண்டியன் கொடியசைத்து பேருந்தை இயக்கி வைத்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்துக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Click it and Unblock the Notifications
