"2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விஜய்.. டெல்லி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” - ஆர்.பி. உதயகுமார்
மதுரை: "2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்னெடுப்புகள் நடந்து வருகிறது. எல்லா மொழிகளிலும் ரீல்ஸ் வெளியிட்டு விஜய்யின் பிம்பத்தை மட்டுமே கட்டமைத்து வருகிறார்கள். டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையில் தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில், அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. விஜய் ஆட்சியை அதிமுக தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று 75 நாட்கள் கடந்துள்ளது. இந்த 75 நாட்களில் தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் அல்லது மக்களுக்காவது ஏதாவது தெரியுமா என்றால், நமக்கு சந்தேகம்தான் எழுகிறது.
எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டும் விஷயங்களையாவது முதலமைச்சர் விஜய் கவனத்தில் கொள்கிறாரா என்றால் அதுவும் சந்தேகம்தான். தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் நடமாட்டம், மின் வெட்டு, சிறை மரணங்கள், பயிர் கடன் தள்ளுபடி, டெல்டா மாவட்ட வறட்சி, மேகதாது அணை பிரச்சனை, இரு மொழி பிரச்சனை என உடனடியாக தீர்வு காண வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், மிகவும் எதார்த்தமாக 'சிறு தவறு நடந்துவிட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்' என விஜய் கட்சியினர் கடந்து சென்று விடுகின்றனர்.
ஆனால், முதலமைச்சர் விஜய் செய்யாததையும் செய்ததாக போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக் கொண்டு ரீல்ஸ் வெளியிட்டு விஜய் பிம்பத்தை கட்டமைப்பதைத் தவிர விஜய் அரசு இந்த 75 நாட்களாக எதுவும் செய்ததாக நமக்கு தெரியவில்லை.
விஜய்யின் இந்த மாய பிம்பத்தை வைத்துதான் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பு நடந்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும் என்பது எச்சரிக்கையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஆர்பி உதயகுமார், "சி.டி.ஆர் நிர்மல்குமார் பேசுவதெல்லாம் பச்சைப் பொய். அவர் எங்கள் கூட இருந்தவர்தான். அவர் எங்கள் ஆள் தான். நாங்கள் தான் அவரை அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம். விஜய்யை முடித்துவிட்டு வா என நாங்கள் தான் அனுப்பி வைத்திருக்கிறோம்.
இப்போது மின்வெட்டு ஏற்படுவதற்கு நிர்மல்குமார் தான் காரணம். விஜய்யை முடிப்பதற்காக அவர் மின் தடையை ஏற்படுத்துவார், போராட்டம் நடக்கும், 200 யூனிட் மின்சாரம் தர மாட்டார். நாங்கள் அனுப்பி வைத்த ஆள் தான் அவர். அதிமுகவினுடைய ஸ்பை தான் நிர்மல் குமார். விஜய்யை முடித்துவிட்டு தான் அவர் வருவார்." என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
