பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு: கோவை ராமகிருஷ்ணன் வெளியேற்றப்படுவாரா?
சென்னை: பெரியார் திராவிடர் கழத்தில் முக்கியத் தலைவர்களிடையே திடீரெனப் பிளவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.
திராவிடர் கழகத்தில் இருந்து கொள்கை காரணமாகப் பிரிந்து வந்து பெரியார் திராவிடர் கழகத்தை துவக்கினார்கள் கொளத்தூர் மணியும், கோவை ராமகிருஷ்ணனும். காவிரி நிதி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு விவகாரம், ஈழத் தமிழர் விவகாரம், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு, தமிழ் மொழி, தமிழர்கள் உரிமை போன்று தமிழகத்தில் நடந்த பல வரலாற்று முக்கிய போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தின் பங்கு மிக முக்கியமானது.
இந்த நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள கோவை ராமகிருஷ்ணன் கட்சி தலைவர் கொளத்தூர் மணி அனுமதி இன்றியும், அவரது கவனத்திற்கு பல தகவல்களைக் கொண்டு வராமலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் மீது அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து கோவை ராமகிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அக்கட்சியில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளது. இதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சுமார் 30க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளிடம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றாராம்.
இது குறித்து பெரியார் திராவிடர் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,
பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தமிழ்நாட்டு சமூக அரசியல் அமைப்பு ஆகும். இந்திய அரசை இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்ய வேண்டாம் எனக் கோரி டெல்லியில் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் தான் இந்த அமைப்பை பலரும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பெரியாரை வைத்து பலர் காசு பார்க்கும் வேளையில் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாகத் தொகுத்து நூல் வடிவில் 11-6- 2010 அன்று பெரியார் திராவிடக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது. இப்படி பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி வரும் இந்த கழகத்தில் ஒரு கலகம் ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்றார்.
ஒரு புறம் பிரச்சனையாக இருந்தாலும் மறுபுறம் மணியையும், ராமகிருஷ்ணனையும் சமாதானம் செய்யும் முயற்சியில் முக்கிய நிர்வாகி ஈடுபட்டு வருகின்றாராம்.


Click it and Unblock the Notifications
