காதலித்து மோசடி வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: இளம் பெண்ணை காதலித்து மோசடி செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி (26) என்பவர் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு எதிராக சென்னை போலீசில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நானும், வருண்குமாரும் காதலித்தோம். எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முதலில் சம்மதம் தெரிவித்த அவரின் பெற்றோர் பின்னர் தயக்கம் காட்டினர். வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரிக்கான அந்தஸ்தைப் பெற்ற பிறகு வரதட்சணையாக அதிக நகை, பணம் மற்றும் கார் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று எங்களை வருண்குமாரும் மற்றும் அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தினர். எனவே வருண்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் வருண்குமார், அவரது தந்தை வீரசேகரன், தாயார் கல்பனா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி), 417 (மோசடி), 420 (ஏமாற்றுதல்), 506(1) (மிரட்டல்), பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4, தகவல் தொடர்பு சட்டப் பிரிவு 66 ஆகிய 6 சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மதாம் 26ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வருண்குமாரும், அவரது பெற்றோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. மேலும் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் வசுந்தரா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
இந்த வழக்கு தொடர்பாக வருண்குமார், பிரியதர்ஷினி ஆகியோருக்கு பொதுவான நண்பர்களாக உள்ள மஞ்சுமித்ரா, ரேக்னா, சிவசங்கரி, ஜோதிடர் கணேசன் மற்றும் சிலரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளேன். நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் சிலவற்றை வருண்குமார் பின்பற்றவில்லை. சில தடயங்களை அழிப்பதற்காகவும், வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்திலும் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை. இந்த வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை.
இதுவரை நடந்த விசாரணையிலும், எனக்கு கிடைத்துள்ள ஆவணங்களின்படியும் பார்க்கும்போது, வழக்கில் கூறப்பட்டுள்ள பெண் கொடுமை, நம்பிக்கை மோசடி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது தெரிகிறது. விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவுகளை வருண்குமார் மதிக்காமலும், எங்களுக்கு ஒத்துழைப்பு தராமலும் இருப்பதால் இந்த நீதிமன்றம் நிவாரணங்களை அவருக்கு கொடுக்கக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications