கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி
கடலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கள்ளக்காதலனும் அவரது 2 நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பெரியகோட்டிமூளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(37). இவரது அக்காள் மகளாக சங்கீதா என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு காட்டுமன்னார்கோவிலை அடுத்த முட்டத்தில் உள்ள சங்கீதாவின் வீட்டில் குடியேறிய அய்யப்பன், அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அய்யப்பனை கடந்த 20ம் தேதி முதல் திடீரென காணவில்லை.
கணவன் அய்யப்பனை பல இடங்களில் தேடிய சங்கீதா, இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். கணவரை காணாமல் போன நிலையிலும், சங்கீதாவிற்கு எந்த கலக்கமும் இல்லாமல் வழக்கம் போல ஜாலியாக சுற்றி திரிந்தார்.
இதையடுத்து சங்கீதாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சங்கீதாவின் நடவடிக்கைகளை கவனித்த போது, அவர் செல்போனில் நீண்டநேரம் பேசுவது தெரிந்தது. இதையடுத்து சங்கீதாவிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர்.
அப்போது தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அய்யப்பனை, கள்ளக்காதலன் வரதராஜன் உடன் சேர்ந்து கொலை செய்ததாக சங்கீதா தெரிவித்தார்.
இது குறித்து சங்கீதா மற்றும் வரதராஜன் விசாரணையில் கூறியதாவது,
காட்டுமன்னார்கோவிலை வடபாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன். சங்கீதாவின் சகோதரரின் மைத்துனரான அவர், சங்கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சங்கீதாவிற்கும், வரதராஜனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
அய்யப்பன் வெளியூர்களுக்கு செல்லும் போது, வரதராஜனை வீட்டிற்கு அழைத்த சங்கீதா அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல ஒருமுறை உல்லாசமாக இருந்த போது, அய்யப்பன் பார்த்து கண்டித்துள்ளார். மேலும் வரதராஜனை வீட்டிற்கு வரக் கூடாது என்று கூறிவிட்டார். சங்கீதாவின் கள்ளக்காதல் சம்பவத்தை நினைத்து தினமும் வரதராஜன் மது குடித்து வந்து அவரை கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையிலும் கள்ளக்காதலை தொடரும் வகையில் வரதராஜன், சங்கீதாவிற்கு செல்போனை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் இருவரும் பேசி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். அப்போது தினமும் தன்னை சித்ரவதை செய்யும் அய்யப்பனை கொலை செய்துவிடலாம் என்று வரதராஜனுக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் சங்கீதா.
திட்டத்திற்கு ஒப்புக் கொண்ட வரதராஜன் சம்பவத்தன்று ரூ.50 ஆயிரம் தருவதாக கூறி அய்யப்பனை அழைத்துள்ளார். இதை நம்பிய அய்யப்பன் வடபாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது அய்யப்பனை தனது நிலத்திற்கு அழைத்து சென்ற வரதராஜன், நண்பர்களுடன் சேர்ந்து அவரை இரும்பு பைப்பால் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து நிலத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் அய்யப்பனை புதைத்துவிட்டனர். வெளியே சந்தேகம் வராமல் இருக்க, சங்கீதா தனது கணவனை காணவில்லை என்று புகார் அளித்துவிட்டு நாடகமாடி உள்ளார்.
இதையடுத்து சங்கீதா, அவரது கள்ளக்காதலன் வரதராஜன், அவரது 2 நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வரதராஜனுக்கு சொந்தமான கிணற்றில் புதைக்கப்பட்டிருந்த அய்யப்பனின் உடலை நேற்று போலீசார் தோண்டி எடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications