இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
ஆடிவெள்ளிக்கிழமையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்' என்பதுதான். எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடிமாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், நேர்த்திக்கடன் செலுத்துவதும் நடைபெறும்.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கன்னியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருச்சி அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆடிவெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். உறுப்புகளை போல செய்யப்பட்ட உருவங்களை காணிக்கை செலுத்தியும், மொட்டை போட்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை அவர்கள் நிறைவேற்றினர்.
மேட்டுப்பாளையம் அருகில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். பொள்ளாச்சி அருகில் அமைந்துள்ள ஆனைமலை மாசானியம்மன் ஆலயத்தில் இன்று பெண் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அம்மனுக்கு பட்டு சார்த்தி வழிபட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். குழந்தையில்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க குவிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
