ஆர்வமுடன் தமிழ் பாடம் படிக்கும் அசாம் மாநில மாணவர்கள்
கோவை: வால்பாறை அரசு பள்ளியில் அசாம் மாநிலக் குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழிலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் குடியேறிவிட்டனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க அசாம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அங்கு அவர்கள் தமிழை மொழிப் பாடமாக படித்து வருகிறார்கள். இந்நிலையில் வால்பாறையை அடுத்த வாட்டர்ஃபால்ஸ் எஸ்டேட் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படிப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சார்லஸ் கூறுகையில்,
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அசாம் மாநில மாணவர்கள் 24 பேர் படிக்கிறார்கள். அவர்கள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முதலில் அவர்களுக்கு தமிழ் கற்பித்துக் கொடுக்க ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். ஆனால் அந்த மாணவர்கள் விரைவிலேயே தெளிவாக தமிழில் பேசவும், படிக்கவும் கற்றுக் கொண்டனர் என்றார்.
வால்பாறை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில்,
வால்பாறை தாலுகாவில் உள்ள 94 பள்ளிகளில் மொத்தம் 3,989 மாணவ-மாணவியர் படிக்கிறார்கள். அதில் மாணிக்கா, லோயர்ஷேக்கல்முடி, வாட்டர்ஃபால்ஸ், கருமலை, நல்லகாத்து உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அசாம் மாநில மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் ஆர்வமாக தமிழ் படிப்பதால் அவர்களின் பெற்றோரும் தயக்கமின்றி அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications