காவிரியில் தமிழகத்தின் பங்கை பெற பாடுபடுவோம்: ஜெயலலிதா உறுதி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: காவிரி நீரில் தமிழகத்தின் பங்கினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு தொடர்ந்து எடுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு மிகவும் குறைந்துவிட்டது என்றும், எனவே நெல் உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என்றும் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்தி கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்த செய்திகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டின் நெல் சாகுபடி குறித்த உண்மை நிலவரத்தை விளக்க வேண்டியது எனது கடமையாகும்.

தமிழ்நாட்டில், சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 47.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், சுமார் 40 சதவீதம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர் ஜுன், ஜுலை மாதங்களில் 3.20 லட்சம் ஏக்கரிலும், சம்பா பயிர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 11.5 லட்சம் ஏக்கரிலும் மற்றும் தாளடி பயிர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 லட்சம் ஏக்கரிலும் பயிரிடப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதன் அடிப்படையிலேயே குறுவை நெல் சாகுபடி பரப்பு அமையும். குறுவை சாகுபடி காலத்தில் மேட்டூர் அணையில் நீர் வரப்பெற்றால்தான் குறுவை பயிர் காலம் முழுவதும் தேவையான தண்ணீர் வழங்க இயலும்.

இதனை கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய தனது இடைக்கால உத்தரவில் தென்மேற்கு பருவ காலத்தில் கர்நாடகம் ஜுன் மாதம் 10.16 டி.எம்.சி. தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டி.எம்.சி தண்ணீரும், ஆகஸ்ட் மாதம் 54.72 டி.எம்.சி. தண்ணீரும், செப்டம்பர் மாதம் 29.36 டி.எம்.சி. தண்ணீரும், அதாவது ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 137 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி உத்தரவில் காவிரி படுகையில் கிடைக்கப் பெறும் 740 டி.எம்.சி. தண்ணீரில் 429 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு உரியது என்றும், கர்நாடகம் ஜுன் மாதம் 10 டி.எம்.சி. தண்ணீரும், ஜுலை மாதம் 34 டி.எம்.சி தண்ணீரும், ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி. தண்ணீரும், செப்டம்பர் மாதம் 40 டி.எம்.சி. தண்ணீரும், அதாவது ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 134 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி கர்நாடக மாநிலம் தனது அணைகளில் உள்ள தண்ணீரை கோடைக்கால பாசனத்திற்கு பயன்படுத்த இயலாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று பிரதமரையும், மத்திய அரசையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ள போதிலும் மத்திய அரசு இன்னமும் இதற்கு செவி சாய்க்கவில்லை.

கர்நாடக அரசு தனது அணைகளில் உள்ள தண்ணீரை கோடைப் பாசனத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் ஜுன் மாதம் முதல் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரின் பங்கு கிடைக்கப் பெறாத நிலையைக் கருத்தில் கொண்டு 21.3.2012 அன்று சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றினை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த இடைக்கால மனுவில், கர்நாடக கோடைப் பாசனத்திற்கு கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி கர்நாடகத்தின் நான்கு பெரும் அணைகளுக்கு வழங்கப்பட்ட 103.24 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த இடைக்கால மனு இன்னமும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று கோரி 17.4.2012 அன்று மேலும் ஓர் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமருக்கு 18.5.2012 அன்று கடிதம் ஒன்றினை எழுதி, அதில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டும்படி கேட்டிருந்தேன். இதற்கும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகளிலேயே அன்றாடம் சிக்கித்தவிக்கும் மத்திய அரசுக்கு இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துவதற்கு நேரம் இல்லை போலும்! எனவேதான் எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க இயலாமல் கொள்கை முடக்கத்தில் சிக்கியுள்ள மத்திய அரசுக்கு தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினையை ஏறெடுத்தும் பார்க்க இயலவில்லை.

இந்த தருணத்தில், ஜுன் மாதத்திலிருந்து கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், இடர்பாடு காலங்களில் விடுவிக்க வேண்டிய அளவுக்குக்கூட கர்நாடகம் நீரை தமிழகத்திற்கு விடுவிக்காததால் குறுவை சாகுபடியை ஓரளவு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் 28ம் தேதியன்று ஆய்வு கூட்டம் ஒன்றினை நடத்தினேன். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜுன் 15ம் தேதியன்று பயிர் சாகுபடி மற்றும் நீர்வரத்து நிலையினை ஆய்வு செய்தேன். அன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 41.11 டி.எம்.சி. தண்ணீரே இருந்ததால் குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு வழிவகை இல்லை.

இதனை கருத்தில் கொண்டும், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் பம்பு செட்டுகள் உள்ளன என்பதால் இந்த பம்பு செட்டுகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி ஓரளவு குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயலும் என்பதை கருத்தில் கொண்டும், டெல்டா விவசாயிகளுக்கு 17.6.2012 முதல் 12 மணி நேர மும்முனை மின்சாரம் விவசாயப் பயன்பாட்டிற்காக வழங்கிட நான் உத்தரவிட்டேன். மேலும், இந்த கூடுதல் மின்சார தேவையை ஈடுசெய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் மின்சாரம் வாங்குவதற்கு தேவையான ரூ.125 கோடியை அரசு வழங்கவும் உத்தரவிட்டேன்.

இதன் காரணமாக ஜுலை 19ம் தேதி வரை 87 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நாற்றங்காலின் பரப்பினை கொண்டு அடுத்த பத்து நாட்களில் மேலும் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதன் மூலம் மொத்தம் 1,37,000 ஏக்கரில் இவ்வாண்டு குறுவை நெல் சாகுபடி செய்யப்படும்.

டெல்டா மாவட்டங்களில் சராசரியாக பம்பு செட் மூலம் ஒரு லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயத்திற்காக 12 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதால், கூடுதலாக 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறை காரணமாக நிலவி வரும் சூழ்நிலையினை வேளாண்மைத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான முக்கிய இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் உரிய நேரத்தில் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் பகுதிகளில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை மேற்கொண்டு நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று ஏற்பாடாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 ஏக்கரில் நெல் விதைக்கும் கருவியால் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த கருவி விதைக்கும் போதே உரமிடும் திறனும் கொண்டது.

இன்னும் ஐந்து வட்டாரங்களில் 250 ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு பணி விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீர் பற்றாக்குறையினை போக்கும் இந்த மாற்று நடவடிக்கை குறுவை பருவத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

நெல்பயிர் மட்டுமின்றி மற்ற உணவு தானியங்களின் சாகுபடி பரப்பை உயர்த்தும் வகையில் மாற்றுச் சாகுபடி திட்டமாக குறுகியகால பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் நேரடி நெல்விதைப்பு மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை வேளாண்மைத் துறை எடுக்கும். குறுவைச் சாகுபடி பரப்பில் ஏற்படும் குறைவினை சம்பா பருவத்தில் ஈடுகட்டும் வகையில் உயர்ரக விதைகள், உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கவும், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக அனைத்து எந்திரங்களும் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜுலை மாத இறுதிக்குள் இன்னும் 1.52 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்படும். கார், குறுவை, சொர்ணவாரி பட்டத்தின் குறியீடான 6.5 லட்சம் ஏக்கரில் இதுவரை 4.52 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடக அரசு ஜுன் மாதம் முதல் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட திறந்துவிடாத நிலையிலும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்துள்ளது. எனினும், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விரைந்து விடுவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவேதான், 21.7.2012 அன்று இடர்பாடு காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும், இடர்பாடு காலங்களில் நீர்ப்பங்கீடு கணக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நீரில் நமக்குரிய பங்கினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்புடன் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுக்கும் என்பதையும், விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனைத்து உத்திகளையும் கடைபிடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+