அதிமுக பெண் நிர்வாகி கொலையில் தொழில் அதிபருக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை
தூத்துக்குடி: மெஞ்ஞானபுரம் அதிமுக பெண் நிர்வாகி கொலையில் தொழில் அதிபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக அவரிடம் செல்போனில் பேசியவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சியோன் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல். அவரது மனைவி செல்வகனி. அவர்களுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டதால் கணவன், மனைவி மட்டும் அங்கு வசித்து வந்தனர். அதிமுகவின் கிளை செயலாளராக இருந்த செல்வகனி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி இரவு செல்வகனி குலசேகரப்பட்டிணத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி வெள்ளாளன்விளையில் உள்ள ஞானாயுதம் என்பவரது தோட்டத்து கிணற்றின் அருகில் பெண் ஒருவர் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து மெஞ்ஞாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் செல்வகனியை யாரோ கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இவ்வழக்கில் 8 மாதங்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் செல்வகனி கொலையில் அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications