ஆட்சியில் உள்ளோரிடம் பொது ஜனம் 'பப்ளிக்'காக கேள்வி கேட்டால் என்னாகும் தெரியுமா?
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம், சரமாரியாக கேள்வி கேட்ட விவசாயியை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மமாதவும் கூட அந்த பொது ஜனத்தின் கேள்விகளால் எரிச்சலடைந்தார்.
காவல்துறையினரால் விவசாயிகள் கைது செய்யப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதுதான் விவசாயி மமதாவிடம் கேட்ட கேள்வியாகும். இப்படிக் கேள்வி கேட்டதால், முதல்வரின் நிகழ்ச்சிக்கு அவர் இடையூறு செய்ததாக கூறி கைது செய்து தூக்கிச் சென்று விட்டது போலீஸ். அதாவது, போலீஸாரின் கைது நடவடிக்கை குறித்து கேள்வி கேட்டவரையே கைது செய்து விட்டனர்.
ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக விளங்கிய மாவட்டம் மேற்கு மிதினாப்பூர். அங்கு கடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மாவோயிஸ்டுகள் கடும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைச் சமாளிக்க முடியாமல் திணறியது கம்யூனிஸ்ட் அரசு. மமதாவும் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அதில் ஆதாயமும் கண்டார்.
ஆனால் ஆட்சியைப் பிடித்து முதல்வர் பதவிக்கு வந்ததும் மாவோயிஸ்டுகளைக் கைகழுவி விட்டார். அவர்களை கடுமையாகவும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் மேற்கு மிதினாப்பூர் மாவட்டம் பேல்பஹாரி என்ற இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. மமதா கலந்து கொண்டு பேசினார்.
வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில் பேசும்போது, பொதுமக்களைப் பார்த்து யாருககாவது ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா, கேளுங்கள் என்று கேட்பது மமதாவின் பழக்கம். அப்படி இந்தக் கூட்டத்திலும் கேட்டார். இதையடுத்து 40 வயதான சிலாதித்யா செளத்ரி என்ற விவசாயி, மமதாவைப் பார்த்து, நீங்கள் விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளீர்கள். காசில்லாமல், வறுமையில் வாடி செத்துக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியுமா, வெற்று வாக்குறுதிகள் போதாது. காவல்துறையினர் விவசாயிகளைக் கைது செய்து கொண்டிருக்கின்றனர். அதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை என்று சரமாரியாக கேட்டார்.
இதைக் கேட்ட மமதா கடுப்பானார். கோபத்துடன், இவர் ஒரு மாவோயிஸ்ட்டாக இருக்கலாம் என்று கோபத்துடன் கூறினார். இதையடுத்து அந்த விவசாயியை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
ஆனால் வெள்ளிக்கிழமையன்று மறுபடியும் அவரைக் கைது செய்து கொண்டு போய் விட்டனர்.












Click it and Unblock the Notifications