For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீரை தராத கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுத்து நிறுத்தும் போராட்டம்: வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

Velmurugan
சென்னை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை தர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் கர்நாடகத்துக்கு தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து மின்சாரம் செல்வதை தடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று திமிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தமிழகத்தை கொந்தள்ளிக்கச் செய்திருக்கிறது. கர்நாடக அரசின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டியது கர்நாடகத்தின் கடமை. கர்நாடக அணைகளில் நீர் இருந்தும் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய 64 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்படாததால் இந்தியாவின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி டெல்டா விளைநிலமெல்லாம் இன்று குறுவை சாகுபடியே செய்ய முடியாத பாலைநிலமாகப் பாழ்பட்டுப் போய்கிடக்கிறது. குறுவைதான் போனதெனில் சம்பா சாகுபடிக்காவது கர்நாடகம் நீரைத் திறந்துவிடும் என்று நம்பிக் காத்திருந்த டெல்டா பாசனபகுதி விவசாயிகளின் இடிதாக்கியதாக இருக்கிறது உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்திருக்கும் மனு!

காவிரி நடுவர் நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பலமுறை இந்திய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டவும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் தமிழன் என்றாலே வேறுதேசத்து குடிமகனாகக் கருதுகிற மத்திய அரசு வழக்கம்போல கள்ள மவுனியாகவே இருக்கிறது. காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைத் திறந்துவிட வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்பதை வலியுறுத்த வக்கற்ற அரசாகவே மத்திய அரசு இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் இந்திய தேசியம்! இந்திய இறையாண்மை என வாய்கிழிய பேசுகின்ற கட்சிகளும் தலைவர்களும் இப்பொழுது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மத்திய அரசாங்கத்தைப் போல்மூலம் வாய்பொத்தி நடைபிணங்களாக அலையப் போகிறார்களா?

தமிழ்நாட்டு மக்களுக்கு குடிக்க நீரைத் தரமாட்டோம் - வேளாண் சாகுபடிக்கு நீரைத் தரமாட்டோம் என்று சண்டியர்தனம் செய்கிற கர்நாடக அரசிடமிருந்து உரிமையைப் பெற்றுத்தர இந்திய தேசியம், இந்திய இறையாண்மை பேசும் சக்திகளால் ஒருநாளும் முடியாது என்பதைத்தான் கர்நாடகத்தின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

கர்நாடகத்து அணைகள் நிரம்பியபிறகே திறந்துவிடுவது என்ற மனோபாவத்தில் கர்நாடகம் இருக்க தமிழகம் வடிகால் பிரதேசம் அல்ல! தமிழர்களும் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல!

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டு மின்சாரம் மட்டும் தேவையா? அதைத் தர தமிழன் இன்றும் ஏமாளியல்ல.

தமிழ்நாட்டுக்கே மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கும்போதும் நெய்வேலி மின்சாரத்தை தென்மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பி கர்நாடகமும் பயன்படுத்துகிறது.

கர்நாடகத்துக்கு போதுமான நீர் இல்லாததால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் சொல்லும்போது தமிழ்நாட்டுக்கு போதுமான மின்சாரம் இல்லாத உண்மையான சூழலில் கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டின் நெய்வேலி மின்சாரத்தை தர முடியாது என்று தமிழகம் சொல்வதுதான் சரியானது!

ஆம் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை தர மறுத்து எங்கள் தேசத்து நெற்களஞ்சியத்தை பாலைதேசமாக்கிய கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை கொடுக்கக் கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு!

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்! என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாடாக - பிரகடனமாக இருக்க வேண்டிய தருணம் இது!

நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக சாதி மதங்களைக் கடந்து அனைத்து மாணவர், இளைஞர், அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்களை ஒன்றிணைத்து மிகப் பெரிய போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி விரைவில் முன்னெடுக்க உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

English summary
Thamizhaga Valvurimai Katchi founder T. Velmurugan told his party decided to protest at Neyveli demanding stoppage of electricity supply to Karnataka, in protest against its refusal to release Cauvery water to Tamil Nadu.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X