60 வது பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்த்!

1952, ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் திருமங்கலத்தில் பிறந்தவர் விஜயகாந்த். இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி.
மதுரையில் தீவிர ரஜினி ரசிகராக வலம் வந்தவர், பின்னர் தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு சினிமாவில் களம்புகுந்தார். எம்ஏ காஜாவின் இனிக்கும் இளமை முதல் படம். தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், நீரோட்டம், அகல் விளக்கு என பெரிதாக சொல்லிக் கொள்ள முடியாத படங்கள். இதில் அகல் விளக்கு படத்தில் ஏதோ நினைவுகள்.. என்ற அபாரமான பாடலை இளையராஜா தந்திருப்பார். அந்தப் பாடல் விஜயகாந்துக்கு பெரிய பிரேக் என்று கூட சொல்லலாம்.
சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அதன் பிறகு, எண்பதுகளில் யாராலெல்லாம் ரஜினியை வைத்துப் படம் பண்ண முடியவில்லையோ, அவர்கள் தங்கள் குறையை விஜயகாந்தை வைத்து தீர்த்துக் கொண்டார்கள். ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்தவர் என்ற பெருமை ரஜினிக்கு உண்டு. விஜயகாந்தும் கிட்டத்தட்ட அந்த சாதனையை நெருங்கினார். அவரும் ஒரே ஆண்டில் 17 படங்கள் செய்து வாய் பிளக்க வைத்தார்.
விஜயகாந்தின் பல படங்கள் சின்ன பட்ஜெட்டில் தயாராகி பெரும் லாபம் குவித்திருக்கின்றன.
தமிழ் சினிமாவில் 100 வது படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்தவர் என்ற பெருமையும் விஜயகாந்துக்கு உண்டு. அதுதான் கேப்டன் பிரபாகரன். அதுவரை புரட்சிக் கலைஞர் என்ற அடைமொழியை வைத்திருந்தவர், அந்தப் படத்துக்குப் பிறகு கேப்டன் ஆகிவிட்டார்!
இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து படங்கள் தயாரித்துள்ளார். 1990-ல் பிரேமலதாவைக் கைப் பிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள். இவர்களில் சண்முக பாண்டியன் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் மீது இளையராஜாவுக்கு எப்போதும் தனிப்பட்ட பாசம் உண்டு. எண்பதுகளில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, நினைவோ ஒரு சங்கீதம் என இவர் நடித்த படங்களை தமிழ் சினிமா உள்ளவரை மறக்க முடியாத படங்களாக மாற்றிய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
பூந்தோட்டக் காவல்காரன், புலன் விசாரணை, சத்ரியன் போன்ற படங்களிலும் விஜயகாந்தின் நடிப்பும் இளையராஜா இசையும் அத்தனை சிறப்பாக இருக்கும்.
2000-ல் வல்லரசு, வானத்தைப்போல, நரசிம்மா, வாஞ்சிநாதன், கண்ணுபடப் போகுதய்யா, தவசி, எங்கள் அண்ணா, சொக்கத் தங்கம், ரமணா என பல படங்களில் நடித்தார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் இவை. ஆனால் சமீப ஆண்டுகளில் அவர் படங்கள் பெரிய அளவில் கிண்டலுக்குள்ளாகின. குறிப்பாக எங்கள் ஆசான், மரியாதை, அரசாங்கம் போன்றவை.
விஜயகாந்த் இயக்கத்தில் வந்த படம் விருதகிரி. அதுதான் அவரது கடைசி படமும். பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடியது.
அரசியலில்...
சினிமாவில் வெற்றிகள் குறைந்தாலும், தேமுதிக என்ற கட்சியை துணிந்து ஆரம்பித்து, எதிர்நீச்சல் போட்ட அவருக்கு அரசியலில் ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே ஜெயித்து சட்டமன்றம் போனார். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி போட்டு, 29 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து என உயர்ந்திருக்கிறார்.
அதிமுகவுடன் உறவு முறிந்த நிலையில், அரசியலில் இனி விஜயகாந்த் எடுக்கப் போகும் முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன.
ஈழத் தமிழர் படும் துயரம் காரணமாக சில ஆண்டுகள் தன் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருந்தார் விஜயகாந்த். பின்னர், மக்களுக்குப் பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடி வருகிறார்.
விஜயகாந்த் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், யாரும் பாராட்டுவது அவரது உதவும் குணம். குறிப்பாக படிப்பு உதவி என்று வரும் மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். விஜயகாந்த் உதவியில் ஐஏஎஸ் ஆன மாணவர்களும் உண்டு.
இந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்த நாளை கடந்த ஒரு மாதமாகக் கொண்டாடி வருகின்றனர் அவரது கட்சிக் காரர்கள். ஏழைகளுக்கு உதவி, நரிக்குறவ இனத்து மக்களுக்கு உதவிகள், கல்வி உதவி, இலவச உடைகள், உணவுகள் என ஏராளமாக செய்துள்ளனர் இந்த ஒரு மாத காலமாக.
திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பலரும் இன்று விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications