கருத்து கணிப்பு: உ.பியில் பாஜகவுக்கு மீண்டும் 4வது இடமே, இடதுசாரிகளுக்கும் சறுக்கல் தொடர்கிறது!
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு இப்போது இடைத் தேர்தல் நடந்தால் உத்தரப் பிரதேசத்தில் முதலிடத்தை சமாஜ்வாடி கட்சியும், இரண்டாவது இடத்தை காங்கிரசும் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் தாண்டி பாஜக 4வது இடத்தையே பிடிக்கும் என்றும் என்டிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து என்டிடிவி ஒரு சர்வே நடத்தியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 18 பெரிய மாநிலங்களில் 125 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 எம்பி தொகுதிகளில் இப்போது தேர்தல் நடந்தால் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தான் அதிகபட்சமாக 33 இடங்களைப் பிடிக்கும். காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 15 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் வெல்லும்.
கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 23 இடங்களிலும், காங்கிரஸ்-அஜீத் சிங் கூட்டணி 26 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவை விட ராகுல் காந்திக்கே ஆதரவு:
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராகுல் காந்தி அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று 46 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மன்மோகன் சிங்குக்கு 33 சதவீதம் பேரும், சோனியா காந்திக்கு 21 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்,
டெல்லி-உ.பியில் ராகுலுக்கு ஆதரவு, ஒடிஸ்ஸா-ஆந்திராவில் எதிர்ப்பு:
டெல்லியில் 65 சதவீதம் பேரும், உத்தரப் பிரதேசத்தில் 62 சதவீதம் பேரும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், ஒடிஸ்ஸாவில் 24 சதவீதத்தினரும், ஆந்திரப் பிரதேசத்தில் 29 சதவீதத்தினரும் மட்டுமே ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா-காங் கூட்டணியே வெல்லும்:
மேற்கு வங்கத்தில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் மொத்தமுள்ள 42 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் (27+3) வெல்லும் என்று தெரியவந்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் 12 இடங்களில் மட்டுமே வெல்வர் என்கிறது கருத்துக் கணிப்பு.
இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களில் (19+6) வென்றது. இடதுசாரிக் கட்சிகள் 15 இடங்களில் வென்றிருந்தன.
கேரளாவில் காங்கிரசுக்கு சரிவு:
கேரளத்தில் தேர்தல் நடந்தால் மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 12 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், 8 இடங்களில் இடதுசாரிக் கூட்டணியும் வெல்லும்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும் இடதுசாரிகள் 4 இடங்களிலும் வென்றிருந்தன.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் இப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியே மீண்டும் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்று 73 சதவீதம் பேரும், ஆண்டனி முதல்வராக வேண்டும் என்று 27 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இடதுசாரிகளைப் பொறுத்தவரை அச்சுதானந்தனே முதல்வராக வேண்டும் என்று 95 சதவீதம் பேரும் பினராய் விஜயன் முதல்வராக வெறும் 5 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆதரவு:
அஸ்ஸாம் மாநிலத்தில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் மொத்தமுள்ள 14 இடங்களில் காங்கிரஸ் 6 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அஸ்ஸாம் கன பரிஷத் 2 இடத்திலும் மற்றவர்கள் 2 இடங்களிலும் வெல்வர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அஸ்ஸாம் கன பரிஷத் 1 இடத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை 28ம் தேதி முதல் என்.டி.டி.வி. ஒளிபரப்பி வருகிறது. வரும் 31ம் தேதி வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications