புதுவையில் முன்விரோதம் காரணமாக திருமா கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு
புதுச்சேரி: புதுவையில் முன்விரோதம் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி மணவாளன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
புதுவை திப்ராயப்பேட்டை லசார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன் (32), புதுவை நகராட்சி ஊழியர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திப்ராயப்பேட்டை முகாம் செயலாளராகவும் இருந்தார். மணவாளனுக்கும் வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த விடுதலை மக்கள் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ராஜசேகருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று இரவு 9.15 மணி அளவில் மணவாளன் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வேளியே சென்றார். சோனாம்பாளையம் 4 முனை சந்திப்பு அருகே உள்ள டீக்கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார். அப்போது ராஜசோகர் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது.
டீக்கடையில் நின்று கொண்டிருந்த மணவாளனை தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் அந்த கும்பல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பிறகு அந்த கும்பல் மணவாளனின் மாமா நாகமுத்து வீட்டுக்கு சென்று அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமைடைந்த அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப்டடார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணவாளனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பதட்டமாக உள்ளது. இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் கொலையாளி கும்பலை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications