கரூரில் வேல்முருகன் கட்சி பேனர்கள் கிழிப்பு: பாமக நிர்வாகிகள் 4 பேர் கைது
கரூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்த பாமக நகரச் செயலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள நேற்று கரூர் வந்தார். அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் அவரது கட்சி சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தாந்தோணி மலையில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். அதோடு அங்கு நின்ற கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாமகவைச் சேர்ந்தவர்கள் தான் டிஜிட்டல் பேனர்களை கிழித்து எறிந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கரூர் நகர பாமக செயலாளர் ராக்கி முருகேசன், ராயனூர் பாமக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பழகன், தாந்தோணி மலை ஒன்றிய பாமக செயலாளர் அர்ஜுன் ராஜ்குமார் மற்றும் பாமகவைச் சேர்ந்த வரதராஜன் ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications