தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரலாமா.. கூடாதா?

Subscribe to Oneindia Tamil

GOI
டெல்லி: தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணியில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா கூடாதா என்று விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஒரு புள்ளிவிவரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டில் உயர் மட்ட அரசுப் பணி என்பது மத்திய அரசுத் துறை செயலாளர்கள் பதவியாகும். இந்தப் பதவிகளில் மொத்தம் 149 அதிகாரிகள் உள்ளனர். இதில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது தான் மிக அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இத்தனைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நாட்டில் சுமார் 23 சதவீதம் பேர் உள்ளனர். 4 இந்தியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், 149 அரசுத்துறைச் செயலாளர்களில் குறைந்தபட்சம் 35 பேராவது தலித்கள் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்களில் ஒருவர் கூட இந்தப் பதவியில் இல்லை.

அடுத்த நிலையில் உள்ள உயர் பதவி கூடுதல் செயலாளர்கள் பதவி. இந்தப் பதவிகளில் மத்திய அரசில் 108 அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டுமே தலித்கள் ஆவர். இணைச் செயலாளர்கள் பதவிகளில் 477 பேர் உள்ள நிலையில், வெறும் 6 சதவீதத்தினரே தலித்கள். மத்திய அரசுத்துறைகளில் இயக்குனர்களாக 590 பேர் இருக்க அதில் வெறும் 3 சதவீதத்தினரே தலித்கள்.

இத்தனைக்கும் இவர்கள் எல்லோருமே ஐபிஎஸ் அதிகாரிகள். ஐபிஎஸ் தேர்வில் 15 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகளாகும் தாழ்த்தப்பட்டவர்களை நமது சிஸ்டம் மேலேயே வரவே விடாமல் தடுத்து வருகிறது என்பதைத் தான் மேற்கண்ட பதவிகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன.

இப்போது காங்கிரஸ் கூட தலித்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசுப் பணியில் இட ஒதுக்கீட்டை கொண்டு வரவில்லை என்பதே உண்மை. அவர்களது ஓட்டு வங்கியை மனதில் வைத்தே இதை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதை பாஜகவால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அந்தக் கட்சி மனதார ஏற்பதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அமலாக்கியபோது ஆட்சியைக் கவிழ்க்க ரத யாத்திரை புறப்பட்டவர் அத்வானி என்பது நினைவுகூறத்தக்கது. இரண்டாவது விஷயம், இந்த தலித் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்து தலித்களின் ஓட்டுக்களை காங்கிரஸ் அள்ளி விடுமே என்ற கோபம் பாஜகவுக்கு.

இந்த விவகாரத்தில் இட ஒதுக்கீட்டு சாம்பியன் என்ற பெயர் பெற்ற முலாயம் சிங் யாதவ் போடும் நாடகம் தான் மிகப் பெரியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் யாதவர்கள், முஸ்லீம்களின் முழு ஆதரவு முலாயமுக்குக் கிடைத்தது. ஆனால், தலித்கள் தொடர்ந்து மாயாவதி பக்கமே சாய்ந்தனர். இனி வரும் தேர்தல்களிலும் தலித்களின் ஓட்டு தனக்கு இல்லை என்பதை முலாயம் உணர்ந்துவிட்டார். இதனால் தலித்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்தால், உயர் ஜாதி இந்துக்களின் ஓட்டுக்கள் தன் பக்கம் வரும் என்பது அவரது கணக்கு. இதன்மூலம் வழக்கமாக பாஜகவை ஆதரிக்கும் உயர் ஜாதியினரை இழுக்க முலாயம் முயல்கிறார். இதுவும் பாஜகவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நிலையும் கவலைக்கிடம்:

இந் நிலையில் நேரடியாக ஐபிஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுவோரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அவர்களுக்கான கோட்டாவைக் கூட பூர்த்தி செய்வதில்லை என்று பிரதமர் அலுவலகமே தெரிவித்துள்ளது.

அதாவது நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 3,251 ஐபிஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளில் தாழ்த்தப்பட்டோர் வெறும் 13.9% தான். பழங்குடியினர் வெறும் 7.3% தான். பிற்படுத்தப்பட்டவர்கள் (இவர்கள் தான் நாட்டில் பெரும் பங்கு உள்ளனர்) வெறும் 12.9% தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஏராளமான இடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மை. அதிகாரிகள் பதவி மட்டுமல்ல, சாதாரண பணியிடங்கள் கூட காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.

2011ம் ஆண்டின்படி மத்திய அரசின் 73 துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளில் 25,037 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 4,518 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டிய இடங்கள்.

மத்திய அரசில் மொத்தமுள்ள பணியாளர்களில் 17 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். அடடே பரவாயில்லையே என்று ஆச்சரியப்படாதீர்கள்.

மத்திய அரசின் குரூப் டி பதவிகளில் உள்ளவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் தான். இவர்களில் பெரும்பாலோனார் துப்புறவுப் பணியாளர்கள் ஆவர். இவர்களது எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 17 சதவீத மத்திய அரசுப் பணியாளர்கள் தலித்கள். ஆனால், குரூப் சி, பி, ஏ என்று பதவிகள் உயர உயர தாழ்த்தப்பட்டவர்களைக் காண்பதே அரிதாகிவிடுகிறது என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+