9 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி டெல்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செய்லபடுத்த கடந்த 1998ம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள முதல்வர்கள் உறுப்பினர்களாகவும், மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் செயலாளராகவும் உள்ளனர்.
இந்த ஆணையம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை 6 கூட்டங்கள் நடந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி தான் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் கடைசியாக நடந்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அந்த கூட்டம் நடந்தது. அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது வரும் 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் தேதி பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெவ்வேறு தேதிகளை குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்படும் தேதியை தெளிவாகக் குறிப்பிட்டு, மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் த்ருவ் விஜய் சிங் தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், காவிரி நதிநீர் ஆணையத்தின் 7-வது கூட்டம் டெல்லியில் வரும் 19ந் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற உள்ளது என்றும், அதில் ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications