திருப்பித் திருப்பி ஒரே பதில்... போலீஸை டென்ஷனாக்கிய ‘சுசி’ ஈமு குரு
கோவை : ‘சுசி' ஈமு நிறுவன உரிமையாளர் குருவிடம், பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், புதன்கிழமை இரவு முழுவதும் விசாரணை செய்தனர். அவர் ஒரே தகவலை திரும்ப திரும்ப கூறுவதால் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்பது சுசி ஈமு உரிமையாளர் குருவின் மீதான புகாராகும். பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் குருவின் மீது ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துவருகின்றனர்.
இதனிடையே தலைமறைவாக இருந்து குருவை செவ்வாய்கிழமையன்று, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகேயுள்ள ஊத்தமலையில், போலீசார் கைது செய்தனர். ஒகேனக்கல், ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்களில், இரவு முழுவதும், குருவிடம் விசாரணை நடந்தது. இதன்பின்னர் கோவை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு, புதன்கிழமை காலை 7.30 மணிக்கு, குருவை அழைத்து வந்த போலீஸ் அதிகாரிகள், அவரிடம், தொடர்ந்து விசாரணை செய்தனர்.
அதன்பின், காலை 10.30 மணிக்கு குருவை போலீசார், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவச் சான்று பெற்று, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையின் போது குரு ஒரே தகவலை திரும்ப திரும்ப கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குருவுக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வங்கிகளில், எட்டு வங்கிக் கணக்குகள் உள்ளன. பொதுமக்களிடம் டெபாசிட்டாக பெற்ற பணத்தில், ஈமு கோழிகள், தீவனம், "செட்' அமைத்துக் கொடுத்து செலவழித்துள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நிலம் வாங்கியுள்ளதை ஒப்புக்கொண்டார். எத்தனை பேரிடம், எவ்வளவு கோடி முதலீடு பெறப்பட்டது; அந்த பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது எனக் கேட்டபோது, ஒரே தகவலை, திரும்பத் திரும்ப தெரிவித்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் "கஸ்டடி'யில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
