தூத்துக்குடியில் 3 ரயில்கள் சிறைப்பிடிப்பு, ரயில்கள் தாமதம்: குமரியில் கடையடைப்பு

கூடங்குளத்தில் போராட்டக்குழுவினர் மீது போலீசார் தடியடி நடத்திய சிறிது நேரத்தில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. உடனே மீனவர்கள், அணு உலை எதிர்ப்பாளர் என அங்கே ஆயிரம் பேர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் வருவதைப் பார்த்ததும் போலீசார் ரயில் நிலையத்தின் வாயிலை பூட்டினர். இதனால் போராட்டக்காரர்கள் சுவர் ஏறி குதித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அந்த ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப தயாராக இருந்த மைசூர் எக்ஸபிரஸ், முத்துநகர் விரைவு ரயில், நெல்லை பயணிகள் ரயில் ஆகியவற்றை அவர்கள் சிறைபிடித்து அவற்றின் மீது ஏறி அமர்ந்தனர். மேலும் சிலர் ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து போக மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
இதைத் தொடர்ந்து மாலை 4.40 மணிக்கு கிளம்ப வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதாக இரவு 7.40 மணிக்கும், இரவு 7.15க்கு செல்ல வேண்டிய முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.05க்கும் கிளம்பின. அவை சென்ற பிறகு நெல்லை பயணிகள் ரயிலும் புறப்பட்டது.
இது தவிர பயணிகளை ஏற்ற காலிப் பெட்டிகளுடன் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை சென்றது. அந்த ரயிலை மாலை 6.50 மணிக்கு வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் ரயில்வே கேட்டில் வைத்து அப்பகுதி மீனவர்கள் வழிமறித்தனர். இதனால் ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால் இரவு 7.40க்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து கிளம்பியது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து வழக்கத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக இரவு 8.45 மணிக்கு புறப்பட்டது.
கூடங்குளத்தில் தடியடி நடத்தப்பட்டதையடுத்து குமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடலோர கிரமாங்களில் உள்ள மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா ஆலயம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். இதேபோன்று சின்னமுட்டம் மீனவர்கள் அங்குள்ள தூய தோமையார் ஆலயம் முன்பும், ஆரோக்கியபுரம் மக்கள் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முன்பும் உண்ணாவிரதம் இருந்தனர்.












Click it and Unblock the Notifications