மன்மோகன்சிங் பங்கேற்ற நிகழ்ச்சியில் சட்டையைக் கழற்றியபடி எதிர்ப்பு கோஷம் போட்டவர் வெளியேற்றம்

இந்திய சட்ட நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையை ஆற்றத் தொடங்கிய போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து நின்று தமது சட்டையைக் கழற்றி சுழற்றியபடியே "பிரதமர் மன்மோகன்சிங்கே திரும்பிப் போ" என்று உரத்த குரலில் முழக்கம் எழுப்பினார் .இதனால் அங்கு திடீரென பரபரப்பும் பதற்றமும் நிலவியது. பிரதமர் மன்மோகன்சிங்கும் தமது உரையை நிறுத்திவிட்டார். பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று முழக்கம் எழுப்பியவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையை தொடர்ந்தார்.
மத்திய அரசின் அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமது அரசின் நடவடிக்கை நியாயமானதே என்று நேற்று தொலைக்காட்சி மூலம் மன்மோகன்சிங் உரையாற்றியிருந்த நிலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications