ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டனர் அதிகாரிகள்!

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோர் கரிக்காட்டுப் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறையிடம் தென்னிந்திய மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெயபாளையன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் அண்மையில் புகார் தெரிவித்திருந்தனர்.
புகார் என்ன?
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் 11 சென்ட் நிலம் முட்டுக்காடு அருகே உள்ள கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தின் அருகே அரசுக்கு சொந்தமான மேய்கால் மற்றும் ஆற்றுப் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் சுமார் 4 ஏக்கர் வரை இவர்கள் ஆக்கிரமித்து 20 அடி உயரத்திற்கு சுவரைக் கட்டியுள்ளனர் என்பதுதான் புகார். ப. சிதம்பரம் குடும்பத்தினர் சுவர் எழுப்பியிருப்பதால் தங்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்றும் சிதம்பரம் குடும்பம் ஆக்கிரமித்த அரசு இடத்தில்தான் தாங்கள் வலைகளை உலர்த்தி வந்ததாகவும் மீனவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் அப்போது நளினி சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர் அருள் நடராஜன் இதை மறுத்திருந்தார். மீனவர்களின் புகார் பொய் என்றும் கூறியிருந்தனர்.
நிலம் மீட்பு
இந்த நிலையில் மீனவர்களின் புகார் குறித்து திருப்போரூர் தாசில்தார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய சுற்றுச் சுவரை இடித்து அரசு நிலத்தை மீட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications