மேட்டூர் நீர் மின்சார உற்பத்தியும் அடியோடு குறைந்து போனது
சேலம்: மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரத்தின் அளவும் அடியோடு குறைந்து போய் விட்டது. இதனால் தமிழகத்தின் மின்சார நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பருவ காலமான ஜூன் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் மழை நீரைக் கொண்டு குடிநீர்த் தேவை, பாசன வசதி மற்றும் மின்சார உற்பத்தியும் செய்யப்படுகிறது மேட்டூர் அணையில். அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்துத்தான் மின் உற்பத்தி அமையும்.
அதாவது, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் போது அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கீழ் கதவணை மின் திட்டங்கள் மூலம் 430 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையும் போது இந்த மின் உற்பத்தியின் அளவும் குறைந்து விடும்.
தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அணைக்கு நீர் வரத்தும் குறைந்து போய் விட்டது. இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது 280 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது.
நீர் மின்சாரமும் கை விடஆரம்பித்துள்ளதால் தமிழக மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications