மேரிலாண்ட் போல் மாறுமா புதுவை? முதல்வர் ரங்கசாமியுடன் டாக்டர் ராஜன் நடராஜன் ஆலோசனை

புதுவையில் மேரிலாண்ட் போல் சுற்றுலா வளர்ச்சி
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், கடற்கரைபூங்கா, சுற்றுலாக் கப்பல்கள், தீம் பார்க் உள்ளிட்டவைகளை, மேரிலாண்ட் பால்டிமோர், ஓசியன் சிட்டி களுக்கு நிகராக அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் மூலம் புதுவைக்கு வெளி நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து, வருவாய் பெருகும் வாய்ப்புள்ளது. மேரிலாண்டின் 'மேரியாட் ஹோட்டல்' நிறுவனம் புதுவையில் புதிய ஹோட்டல் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.
கம்ப்யூட்டர், கட்டமைப்பு, மருத்துவத்துறைக்கு சிறப்பு கவனம்
புதுவையில் சென்னையைப் போல் கம்ப்யூட்டர் நிறுவனங்களை புதுவைக்கு கொண்டு வருவதற்கு தேவையான கட்டமைப்புகள் குறித்து விவாதித்தனர், மேரிலாண்ட் நிறுவனங்கள் அன்னிய முதலீடு, கட்டமைப்பு போன்ற வகைகளில் எவ்வாறு உதவலாம் என்று டாக்டர் ராஜன் எடுத்துரைத்தார்.
புதுவையில் ஏற்கனவே உள்ள மருந்து உற்பத்தி துறையை மேலும் எவ்வாறு முன்னேற்றம் அடையச்செய்யலாம் என்று முதல்வர் கேட்டறிந்தார். சிறிய மாநிலமான புதுவையில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் ரெட்லைட் காமிரா உள்ளிட்ட சாலைக் கட்டமைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட்து. இந்த துறையில் அமெரிக்காவின் முன்ணணி மாநிலம் மேரிலாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
சோலாருக்கு முதலிடம்
மேரிலாண்டின் முதன்மை தொழில்நுட்பமான சோலார் மற்றும் சோலார் தெர்மல் மின் திட்டங்கள் குறித்து விரிவான தகவலகளை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக சோலார் தெர்மல் பற்றி முதல்வர் ரங்கசாமி மிகுந்த ஆர்வம் காட்டினார். 24 மணி நேரமும் முழுமையான மின்சாரம் இருந்தால், வளர்ச்சி விகிதம் மும்மடங்கு அதிகரிக்கும் என்பதை டாக்டர் ராஜன் விலாவாரியாக எடுத்துக் கூறினார்.
மேரிலாண்டிற்கு வாருங்கள்
சிறிய மாநிலமாக இருந்தாலும் தங்கள் மாநிலத்திற்கும் கவனம் கொடுத்து, நேரம் ஒதுக்கி, வந்திருந்து பேச்சு வார்த்தை நடத்தியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.
தமிழர்களின் இன்னொரு மாநிலமான புதுவைக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக டாக்டர் ராஜன் உறுதி கூறினார். மேலும், மேரிலாண்டிற்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராஜன், கவர்னரை சந்தித்து இரு மாநில நலன்களுக்கான திட்டங்கள் குறித்து இறுதி முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.
முன்னதாக முதல்வர் ரங்கசாமியின் எளிமையை வெகுவாக பாராட்டிய டாக்டர் ராஜன், உலகெங்கும் பல தலைவர்களை சந்தித்து வரும் நான், உங்களைப் போன்ற எளிமையான தலைவரை பார்த்ததில்லை என்று புகழாரம் சூட்டினார்.
முதல்வரும், அமெரிக்காவில் பெரிய அரசுப்பதவியில் இருந்தாலும், தமிழ் மண்ணின் மீதுள்ள பாசம் உங்களுக்கு குறையவில்லை, மாறாக அதிகரித்திருப்பதாக உணர்கிறேன் என்று டாக்டர் ராஜனை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications