கருணாநிதியின் பேத்தி கணவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?.. அக். 3ல் தெரியும்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேத்தி கணவரும், மகள் செல்வியின் மருமகனுமான டாக்டர் ஜோதிமணி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 3ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை தெற்கு கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வி.எம்.ஜோதிமணி. இவர் செல்வியின் மருமகன் ஆவார். இவர் மீ்தும், செல்வி மீதும் வி.நெடுமாறன் என்பவர் நில மோசடி தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், காஞ்சீபுரம் பகுதியில் உள்ள நிலத்தை விற்பதாகக் கூறி, மூன்றரை கோடி ரூபாயை முன்பணமாக வாங்கிவிட்டு, அதை திருப்பித் தரவில்லை என்று புகார் கூறியிருந்தார். மேலும் இதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்திலும் ஒரு வழக்குப் போட்டார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் புகாரை விசாரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செல்வி, ஜோதிமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் 406, 420 மற்றும் 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் விசாரணைக்கு வருமாறு செல்வி, ஜோதிமணிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி அக்பர் அலி விசாரித்தார்.
அப்போது செல்வி சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications