தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்
ராமேஸ்வரம்: இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு அவர்கள் வைத்திருந்த வலைகளை அறுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்று காலை 800 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று மாலை இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கருங்கற்களை வீசித் தாக்கினர். அப்போது மீனவர்கள் படகில் படுத்து தங்களை காத்துக் கொண்டனர். மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து கடலீல் வீசிவிட்டு சென்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாகுல அந்தோணி, பிச்சை, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட 10 படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று மீனவர்கள் இரவோடு இரவாக ஊர் திரும்பினர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருவது தொடர்கதையாகிவிட்டது. இது எப்போது தான் நிற்குமோ என்ற ஏக்கத்தில் உள்ளனர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications