'அவசர' செயற்குழு... கருப்பு சட்டை போட்டு 5ம் தேதி மனிதச் சங்கிலியாக நிற்க திமுக தீர்மானம்!!!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடியது. என்னவோ, ஏதோ என்று டெல்லி முதல் சென்னை வரை அத்தன பேரும் பரபரப்போடும், படபடப்போடும் காத்திருக்க, மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அறிவித்து கூட்டத்தை முடித்துள்ளது திமுக.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். வரலாறு காணாத ஊழல் புகார்கள், மோசடிப் புகார்கள், தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி என மத்திய அரசு மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துத்தான் சமீபத்தில் மமதா பானர்ஜி கோபித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறினார். இதனால் திமுகவுக்கு தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கியத்துவம் கூடியுள்ளது.

எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நடத்திய பாரத் பந்த் போராட்டத்தில் திமுகவும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. இதையடுத்து நாராயணசாமியை சென்னைக்கு அனுப்பி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், திமுகவுக்கு காலியாகவுள்ள 2 மத்திய கேபினட் அமைச்சர்களுக்கான பெயர்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் இதை கருணாநிதி நிராகரித்து விட்டார். இதனால் காங்கிரஸ் தரப்பு மேலும் அதிர்ச்சி அடைந்துளளது.

மமதாவைப் போல திமுகவும் வெளியேறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்படியெல்லாம் நட்டாற்றில் விட மாட்டோம் என்பதைப் போல கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் திமுகவுக்குள் காங்கிரஸை விட்டு விலகிப் போக வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்றைய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

வந்தார் அழகிரி -குஷ்புவும் பங்கேற்றார்

சமீப காலமாக நடந்த திமுக முக்கியக் கூட்டங்களையெல்லாம் புறக்கணித்து வந்த மு.க.அழகிரி இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக அவர் நேற்றே சென்னைக்கு வந்து விட்டார்.

அவர் தவிர மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும், மூத்த தலைவர்களும், செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். முக்கியமாக நடிகை குஷ்பு, பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி - இவரும் ஒரு செயற்குழு உறுப்பினராம் - உள்ளிட்டோரும் வந்து பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறதோ என்ற பரபரப்பில் திமுகவினரும் இருந்தனர். ஆனால் உப்புச் சப்பில்லாமல் ஒரு தீர்மானத்தைப் போட்டு கூட்டத்தை முடித்து விட்டது திமுக.

கூட்டத்தில் திமுகவினர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனராம். பிறகு மின்வெட்டு குறித்தும் பேசினார்களாம். மத்திய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாம்.

அத்தனையும் பேசி முடித்த பின்னர் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு கருணாநிதியே தலைமை தாங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள் விவரம்

- கேல்கர் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளில், அரசு அளித்து வரும் மானியங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களாக உள்ள நிலங்கள் உட்பட அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்தல், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தல், அனைத்து விதமான சேவைகளையும் வரிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் போன்றவை அடங்கும். இந்த பரிந்துரைகளை முற்றாகப் புறக்கணித்திட வேண்டும்.

கர்நாடக அரசுக்குக் கண்டனம்

- கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், பிரதமர் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்ததை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எனினும் தற்போது உச்ச நீதி மன்றமே, 9,000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டநிலையில், அந்த உத்தரவினை தொடர்ந்து நிறைவேற்றிட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுமென்றும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு முன் வரவேண்டுமென்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது வருந்தத்தக்கது என்பதையும் இந்தச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

ஐ.நாவிடம் டெசோ தீர்மானங்கள்

- டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. பொதுச்செயலாளரிடமும், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.இதற்காக திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் - திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஐ.நா. மன்றத்திற்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைக்க இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

சில்லறை வர்த்தகம்.. மறு பரிசீலனை செய்க

- சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால், இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான சில்லரை வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன் வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவினை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு

- இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து, உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவரின் விளக்கம் கோரிய மனுவிற்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர்த்த ஏனைய இயற்கை வளங்களுக்கான ஒதுக்கீடுகளை ஏலத்தில் தான் வழங்க வேண்டுமென்று அவசியமில்லை என்று தெரிவித்திருப்பதின் காரணமாக, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள் மேலும் தொடருகின்ற நிலையிலேயே உள்ளது. எனவே உரிமங்களை ரத்து செய்து வழங்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதி மன்ற பெஞ்ச் தீர்ப்பினை எதிர்த்து - ஏற்கனவே மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட்ட மறு ஆய்வு மனுவினை உடனடியாக மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமென்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திமுகவினர் மீதான வழக்குகள்... தமிழக அரசுக்குக் கொட்டு

- திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தி முடிக்காததால், தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கூடங்குளம் பகுதியில் மக்கள் மீதான போலிஸ் அடக்குமுறை, அரசுத் துறைகளில் லஞ்சம், சங்கலிப் பறிப்பு, கொலை, கொள்ளை, விலைவாசி உயர்வு, அமைச்சர்கள் மாற்றம், கட்டண உயர்வு என தமிழகமே இருண்டு உள்ளது. அதிமுக அரசு, இம்மென்றால் வழக்கு; ஏனென்றால் சிறைவாசம் என இந்த அநியாயங்களையும் குளறுபடிகளையும் மக்கள் விரோதப் போக்குகளையும் கண்டித்து சென்னை மாநகரில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து கடற்கரை சாலை வழியாக கடற்கரை சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையில் கறுப்பு உடை அணிந்த மனித சங்கிலியும் - அது போலவே தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதியன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் கறுப்புடை அணிந்த மனித சங்கிலியும் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+