அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்!
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
ஆந்திர மாநிலத்தின் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 48 மணிநேரமாக அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடையும் 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் மாயனூரில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்ககடலில் நகராமலும், வலுவிழக்காமலும் அதே இடத்திலேயே நீடிப்பதால் அடுத்த 24 மணிநேரமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பலமான தரைக்காற்று வடமேற்கு திசையில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது வீசும்.
அடுத்த 24 மணி நேரம் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில பகுதிகளில் பெய்யலாம். மழை நீடிப்பது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி மையமும் வானிலையின் போக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜில் ஜில்' சென்னை...
சென்னை மாநகரம் நேற்று முதலே படு கூலாக இருந்து வருகிறது. இரவில் முன்பு புழுங்குத் தள்ளும், நேற்று இரவு செம ஜில்லாக இருந்தது. வானமும் மேகமூட்டமாக காணப்படுகிறது. சில இடங்களில் லேசான தூறல் காணப்பட்டது. இன்று எப்படியும் மழை வந்து விடும், ஜாலியாக அனுபவிக்கலாம் என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications