நீர்நிலைகளை அழித்து அரசுக்கு ரூ.1.44 கோடி இழப்பு: பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்த கிரானைட் குவாரியில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீர்நிலைகளில் கிரானைட் கழிவுகளை கொட்டி அழித்ததாக 2 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி பொறியாளராக உள்ளார். இவர் கீழவளவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கீழவளவு அருகே குழிஎச்சல்பட்டியில் சிறுமாணிக்கம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கரைகளை கடந்த 2005ம் ஆண்டு முதல் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் அழித்து வந்துள்ளனர். கண்மாயில் கிரானைட் கழிவுகளை கொட்டிவிட்டு, அதை மறைக்க சம்பந்தப்பட்ட இடத்தில் மணலை கொட்டியும், கற்களை நிறைத்தும் வந்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்லும் மடைகள் அடைப்பட்டு, விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.1 கோடியே 14 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இ.மலம்பட்டி அருகே உள்ள குப்பையன் குளத்தின் கரைகளையும் பி.ஆர்.பி நிறுவனத்தினர் அழித்துவிட்டனர். கற்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கழிவு கற்களை கொட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசிற்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.ஆர்.பழனிச்சாமி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பி.ஆர். பழனிச்சாமி மீது இதுவரை மொத்தம் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications