கருப்பு சட்டையுடன் துண்டுப் பிரசார விநியோகம்.. கருணாநிதி தொடங்கி வைத்தார்

அதிமுக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழு தீர்மானித்தது. ஆனால் அதற்கு காவல்துறையிடமிருந்து சரிவர அனுமதி கிடைக்காததால், போராட்டத்தை ரத்து செய்து விட்டு கருப்புச் சட்டை அணிந்து துண்டுப் பிரசாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவித்தது தலைமை.
திமுகவினர் 3 நாட்களுக்கு கருப்புச் சட்டையுடன் துண்டுப் பிரசார போராட்டத்தை நடத்துவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் அவர் நேற்றே கருப்புச் சட்டை, வெள்ளைத் துண்டுக்கு மாறி விட்டார். இனி என்றென்றும் இப்படியே இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் கருணாநிதி துண்டுப் பிரசுர போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்.
துண்டுப் பிரசுர பிரச்சாரத்தைத் துவக்கி வைத்து கருணாநிதி பேசுகையில், தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசிகள் மிகக் கொடுமையாக ஏற்றப்பட்டு வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ள வேதனையைச் சுட்டிக்காட்டவும், ஒவ்வொரு நாளும் கொலை, தற்கொலை என்பது போன்ற அவலச் செய்திகள் சூழ்ந்து நடைபெறுகின்ற நிலைமைகளை எடுத்துக் காட்டவும், சட்டம், ஒழுங்கு, அமைதி ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ காப்பாற்றப்படா விட்டால் அங்கே அராஜகம்தான் தலை தூக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை எடுத்தால், எங்கே சுவர் இடிந்து விழுந்ததோ, 2 எங்கே கட்டிடம் இடிந்துது விழுந்ததோ? எங்கே விபத்தோ? எங்கே தற்கொலையோ? எங்கே கொலையோ? என்று அச்சத்தோடு பார்க்க வேண்டிய நிலைமை. அந்தப் பத்திரிகைகளிலே உண்மையான செய்திகள் வந்தால், அந்தச் செய்திகளை நீ எப்படி வெளியிடலாம் என்று பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலம் உள்ளது.
இதைத் தட்டிக் கேட்க, இதை எடுத்துக்காட்ட, பொதுமக்களின் குரலை ஓங்கி ஒலிக்க இன்றையதினம் நான், அதைப்போலவே நம்முடைய கழகத்தின் தலைவர்கள், ஆங்காங்கு தலைமையேற்று கருப்பு உடை அணிந்து அந்த அணி வகுப்புகளை நடத்துவதென்று திட்டமிட்டு, அதை அறிவித்திருந்தோம்.
ஆனால் முறைப்படி பெரியார் வழியில், அண்ணா வழியில், அமைதியாக அந்தக் கிளர்ச்சியைக்கூட நடத்த வேண்டுமென்பதற்காக, நாம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டுமென்று மாவட்டங்களிலே உள்ள போலீஸ் அதிகாரிகள், மாநிலத் தலைநகரிலே உள்ள போலீஸ் அதிகாரி - இவர்களையெல்லாம் மிகுந்த பணிவோடு அவர்களுக்கும் பொறுப்பு உண்டு, அவர்களுக்கும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுகின்ற அந்த அக்கறை உண்டு என்ற நம்பிக்கையோடு மனுக்கள் எழுதி ஒவ்வொரு மாவட்டத்திலும், சென்னை மாநகரத்திலும் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து இறுதியாக நேற்று மாலை வரையிலே அனுமதி உண்டா இல்லையா என்று தெரியாத ஒரு நிலைமைக்கு நம்மை ஆளாக்கிய இந்த அரசு அதற்கு துணை நின்ற போலீஸ் அதிகாரிகள் திடீரென்று நேற்றைய தினம் அனுமதி கிடையாதென்று அறிவித்து விட்டார்கள்.
அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால், சென்னையிலே ஒரு இடத்திலே மட்டும் அணி வகுப்பு நடந்திருக்கும். அதைப்போல திருச்சியிலே, சேலத்திலே, மதுரையிலே, கோவையிலே என்று ஒவ்வொரு இடத்திலே தான் கருப்பு உடை அணிந்து நாம் நடத்தவிருந்த அணிவகுப்பு நடந்திருக்கும்.
என்னமோ தெரியவில்லை, முதலமைச்சருக்கு நம்மீது ஓர் அன்பு. இவர்களுடைய கிளர்ச்சி ஒரு இடத்தோடு நின்று விடக்கூடாது, தமிழ் நாட்டிலே பரவலாக நடைபெற வேண்டுமென்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் அனுமதி மறுத்து விட்டார்கள்.
அனுமதி மறுத்த காரணத்தால் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தலைமைக் கழகத்திலே கூடி எடுத்த முடிவின்படி, அனுமதி தராவிட்டாலும் பரவாயில்லை, ஆங்காங்கு நம்முடைய கழகத் தோழர்கள் உரிய முறையில் அற வழியில் கருப்பு உடை அணிந்து இந்த அரசைப் பற்றிய குற்றம் குறைகளை, மக்களின் கொதிப்பை இன்றைக்கு தமிழ்நாடே இருண்ட கண்டமாக மாறியிருக்கின்ற நிலையை எடுத்துக்காட்ட ஆங்காங்கு துண்டறிக்கைகளை எழுதியோ, அச்சிட்டோ பொதுமக்களுக்கு வழங்குகின்ற ஒரு செயலில் ஈடுபட்டு நடத்துங்கள் என்று நான் விடுத்த அழைப்பையேற்று தமிழ்நாடு முழுதும் எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்தத் துண்டறிக்கை விநியோகம் நடைபெறுகிறது.
இதற்காக நான் எங்களுடைய போராட்டத்தைத் தடுத்து, இந்த வழியிலே போராடுகின்ற ஒரு நிலையை ஏற்படுத்திய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இந்த நிகழ்ச்சியை அமைதியோடு நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
பின்னர் நொச்சிக்குப்பம் பகுதியில் நடைபெறும் துண்டு பிரசுரம் வழங்கும் போராட்த்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications