இனிமேல் கருணாநிதியின் 'யூனிபார்ம்'.. கருப்புச் சட்டை.. வெள்ளை துண்டு!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் நடைபெறும அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து, இனிமேல் கருப்புச் சட்டையே அணிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடுமையான மின் தடை, குடிநீர் பஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழக செயற்குழுவிலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதிகோரி, காவல் துறையினரிடம் எழுதிக்கொடுத்தால் அதற்கு கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை.

கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக் குறித்துக் கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால்; அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சனைகளுக்காக நடத்தவிருந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கறுப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை- கறுப்பு உடை அணிந்து வீடு வீடாக சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்து சொல்லக்கூடிய அளவிற்கு நம்மை கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.

கழகம் நடத்தவிருந்த மனிதச் சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், "அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க. வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்" போராட்டம் என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.கவினர் பழிவாங்கப்படு வதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே காட்சியளிக்கிறது.

இந்த அவலங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலேதான் 5ம் தேதியன்று சென்னையிலும், 6ம் தேதியும், 7ம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம்.

என்னை பொறுத்தவரையில் 5ம் தேதி ஒரு நாள்தான் இந்த ஆட்சியினரின் அவலங்களை எதிர்த்து கறுப்பு உடை அணிவதாக இருந்தேன். ஒரு பழைய நிகழ்வை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

திராவிட விடுதலைப்படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்கு தேவை என்று திருச்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், அதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945 செப்டம்பர் 29ம் நாள் "குடிஅரசு'' இதழில், கறுப்பு சட்டை படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே.சம்பத், கவிஞர் கருணானந்தம் ஆகிய இருவரும் அதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் அறிவிப்பு 22-12-1945 "குடிஅரசு'' இதழ் வரையில் தொடர்ந்து வெளியானது.

தந்தை பெரியார் விரும்பி அமைத்த அந்த கறுப்பு சட்டை படையின் முதல் தொண்டராக அப்போது ஈரோட்டில் பதிவு செய்து கொண்டது யார் தெரியுமா? இதே மு.கருணாநிதிதான்.

அந்த மு.கருணாநிதிதான், மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளைய தினம் கறுப்பு சட்டை அணிந்து மனித சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கறுப்பு சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன்!

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+