300 வழக்குகளுடன் சுதந்திரமாக உலா வந்த 'ஐபிஎஸ் ஆபீசர்'.. 6 மாநில போலீஸை ஆட்டிப் படைத்தவர்!
கிருஷ்ணகிரி: 6 மாநில போலீஸார் கண்ணில் விரலை ஆட்டி பல காலமாக மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு பலே நபரை கிருஷ்ணகிரி போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த நபர் மீது ஆறு மாநிலங்களிலும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
சரளமான ஆங்கிலம், மிடுக்கான நடை, எடுப்பான உடை, கறார் பேச்சு என மோசடியில் ஈடுபட்டு வந்த இந்த ஆசாமியின் பெயர் முனியராஜ். 38 வயதாகிறது. படிப்பு பத்தாவது வரைதான் என்றாலும் சூப்பராக ஆங்கிலம் பேசுகிறார். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லிக் கொண்டுதான் அயோக்கியத்தனத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நபருக்கு சொந்த ஊர் ஆந்திரா.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் இந்த நபர் பல்வேறு கைவரிசைகளை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த மோசடிகள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தையும், தங்க நகைகளையும் சுருட்டியுள்ளார். இந்த நபர் மீது ஆறு மாநிலங்களிலும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம்தான் இவரை கையும் களவுமாக பிடித்தனர். ஆனால் கோர்ட்டுக்குப் போகும் வழியில் தப்பி விட்டார். இருப்பினும் தற்போது இந்த நபரை மீண்டும் கைது செய்து விட்டனர் போலீஸார்.
நகை, பண மோசடி மட்டுமல்லாமல் பெண்களை குறி வைத்து வளைத்து வலையில் வீழ்த்தும் வேலையையும் இந்த நபர் செய்து வந்துள்ளார். பல பெண்களை இவர் இப்படி சாய்த்துள்ளாராம்.
இந்த நபர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளதால் இவரை பலத்த பாதுகாப்பாக வைத்துள்ளனர் கிருஷ்ணகிரி போலீஸார்.












Click it and Unblock the Notifications